ரிசர்வ் வங்கி விதித்த புதிய கட்டுப்பாடுகளை மக்கள் நலன் கருதி திரும்பப்பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

4 hours ago 2

சென்னை: ரிசர்வ் வங்கி விதித்த புதிய கட்டுப்பாடுகளை மக்கள் நலன் கருதி திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் அவரச தேவைக்கு தங்களிடம் சேமிப்பாக இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகையை மட்டுமே நம்பியிருந்தார்கள். மேலும், அவற்றை வங்கியில் அடகு வைப்பதன் மூலம் தங்களின் அவரசத் தேவைகளை சமாளித்து வந்தார்கள். ஆனால், தங்கநகை அடகு வைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடு, ஏழை எளிய மற்றம் நடுத்தர மக்கள் மீது பேரிடியாக விழுந்துள்ளது.

முன்பெல்லாம் வட்டியை மட்டும் செலுத்தி அதனை மறு அடகு வைக்கலாம். ஆனால் தற்போது வட்டி அசல் இரண்டையும் செலுத்தி விட்டு அதற்குப் பிறகுதான் நகையை மறு அடகு வைக்க முடியும். அதுவும் அடுத்த நாள் தான் வைக்க முடியும் என்ற கட்டுபாடு, தங்கத்தின் தரம், அதன் உரிமையாளர் என்ற சான்று, அவற்றை வாங்கியதற்கான ரசீதுகள், 75சதவீதம் மட்டுமே கடன் போன்ற கட்டுபாடுகள் அனைத்துத் தரப்பினரையும் பெருமளவில் பாதித்துள்ளது.

தனியார் நகை அடகு கடைகளில் வைப்பதை விட வங்கிகளில் வைத்தால் குறைந்த வட்டி என்பதோடு பாதுகாப்பாக இருக்கும் என்பதால் வங்கிகளில் நகையை அடகு வைக்கவே மக்கள் விரும்புகிறார்கள். ரிசர்வ் வங்கியின் இந்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் கந்து வட்டிக்காரர்களின் கொடுமை அதிகரிக்கும். பொதுமக்கள் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். எனவே, மக்கள் நலன் கருதி, ரிசர்வ் வங்கி விதித்த புதிய கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ரிசர்வ் வங்கி விதித்த புதிய கட்டுப்பாடுகளை மக்கள் நலன் கருதி திரும்பப்பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article