கான்பூர்,
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங், சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்கு அறிமுகம் ஆனார். இந்திய அணியிலும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.
இந்த நிலையில் ரிங்கு சிங்குக்கும், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. பிரியா சரோஜிக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை பிரியாவின் தந்தை துபானி சரோஜ் மறுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "ரிங்கு சிங், பிரியா இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் ரிங்கு சிங்குக்கு, எனது மகளை திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.