
தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (மார்ச் 19) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. திருவிழா முடிவடைந்ததால் ராமேசுவரத்தில் இருந்து 403 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த கென்னடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சங்கர் (வயது 53), அர்ச்சுனன் (35), முருகேசன் (49) ஆகிய 3 பேர் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இவர்கள் நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்தபோது திடீரென அங்கு 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்த 3 மீனவர்களையும் சிறைப்பிடித்து கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சத்தீவு திருவிழா முடிந்து கடலுக்கு சென்ற முதல் நாளே ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் நேற்று விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்களையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், மீனவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ஒருநாள் ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 800 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.