
மதுரை,
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கக் கூடிய தமிழ்நாடு பாடநூல் கழகம், தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அச்சடித்து வழங்கி வருகிறது.
இந்த பாடநூல் கழகத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 22 இடங்களில் பாட புத்தக கிடங்குகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு கிடங்கிலும் மண்டல அலுவலர் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்களை தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்து பல்வேறு மாவட்டங்களில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மதுரை மண்டலத்தில் பணிபுரியும் பெண் அலுவலர், 75 லட்சம் ரூபாய்க்கு ஏற்கனவே பணிபுரிந்த இடத்தில் முறைகேடு செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மதுரை மண்டல அதிகாரியை டிஸ்மிஸ் செய்து தமிழ்நாடு பாடநூல் கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அது மட்டுமின்றி சென்னை தரமணியில் பாடநூல் கழகத்திற்கு ஒரு கிடங்கு இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் மண்டல அலுவலர், அதே போல் திருவள்ளூர் மற்றும் திண்டுக்கல் மண்டல அலுவலர்கள் ஆகியோரும் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட 3 மண்டல அலுவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகங்களை பில் இல்லாமல் முறைகேடாக தனியார் பள்ளிகளுக்கு விற்று மோசடி செய்யப்பட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மற்ற கிடங்குகளிலும் அதிரடியாக சோதனை செய்வதற்கு பாடநூல் கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.