ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலத்தையொட்டி ராமேஸ்வரம் தீவு பகுதியில் விசைப்படகுகளுக்கு பராமரிப்பு பணியை மீனவர்கள் துவக்கியுள்ளனர். தமிழக கடலில் மீன்கள் இனப்பெருக்க காலமாக இரண்டு மாதங்கள் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான தடைக்காலம் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் அமலில் இருக்கும்.
இந்த காலத்தில் வங்காள விரிகுடா, பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை உள்ளது. இதனால் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான தமிழக கடல் பகுதியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த காலங்களில் விசைப்படகு மீனவர்கள் பராமரிப்பு பணிக்காக அந்தந்த துறைமுகங்களில் படகுகளை கரைக்கு ஏற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தடைக்காலம் துவங்கி இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அந்தந்த துறைமுகங்களில் மீனவர்கள், விசைப்படகுகளை பராமரிப்பு பணிக்காக கரைக்கு ஏற்றி பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய துறைமுகத்தில் விசைப்படகுகளை மீனவர்கள் கரைக்கு ஏற்றி படகுகளுக்கு பழுது நீக்கும் பணியை துவங்கியுள்ளனர். படகின் உரிமையாளர்கள் பழுது நீக்க தேவையான மரப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்க பல லட்சம் கடன்களை பெற்று பராமரிப்பு பணியை மேற்கொள்கின்றனர். இறுதி நாட்களில் துறைமுகத்தில் படகுகளை ஏற்ற நெருக்கடி ஏற்படும் என்பதால், மீனவர்கள் பலர் முன்னதாகவே பராமரிப்பு பணியை துவங்கியுள்ளனர்.
தற்போது ராமேஸ்வரம் துறைமுகத்தில் 50க்கும் மேற்பட்ட படகுகளை பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. ராமேஸ்வரம் தீவு முழுவதும் விசைப்படகுகள் பராமரிப்பு பணியை துவங்கியுள்ளதால் மரப்பட்டறை, லேத், வெல்டிங் ஒர்க்ஸ், இன்ஜின் மெக்கானிக் மற்றும் இரும்பு கடை என சார்பு தொழிலாளர்கள் பரபரப்பாகியுள்ளனர்.
The post ராமேஸ்வரம் தீவு பகுதியில் விசைப்படகுகளுக்கு பராமரிப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.