திருநெல்வேலி: திருநெல்வேலியிலுள்ள பிரசித்தி பெற்ற அருள்தரும் காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவர் திரைப்பட பாடலுக்கு ஆடி ரீல்ஸ் பதிவு செய்த காட்சிகள் வைரலானது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோயில் செயல் அலுவலர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இத்திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவரும் திரைப்பட பாடலுக்கு ஆடி ரீல்ஸ் பதிவு செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது பக்தர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. புனிதமான கோயில் வளாகத்தில் இவ்வாறு அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.