ராமேஸ்வரம்-தலைமன்னாருக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து

3 hours ago 2

*பாலம் அமைக்கும் பணிகள் படுவேகம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துக்காக புதிய கடல் பாலம் கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.இலங்கை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான கப்பல் போக்குவரத்து 1914ம் ஆண்டு துவங்கப்பட்டது.

50 ஆண்டு நடைபெற்று வந்த கடல் போக்குவரத்து 1964ல் வீசிய கோரப்புயலில் தனுஷ்கோடி நிலைகுலைந்ததால் நிறுத்தப்பட்டது. மீண்டும் துவங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து, இலங்கை உள்நாட்டு போர் காரணமாக சில ஆண்டுகளில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க இரு நாடுகளும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், கடந்த 2023, அக். 14ல் நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒன்றிய அரசால் துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாகர்மாலா திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை துவங்க ஒன்றிய அரசு திட்டமிட்டது.

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முன்னாள் துணைத்தலைவர், தலைமைச் செயல் அலுவலர் வள்ளலார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர்‌, ராமேஸ்வரம் தீவின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கப்பல் சேவை மற்றும் சுற்றுலா படகு சவாரி இயங்குவதற்கு பொருத்தமான அக்னி தீர்த்தக் கடற்கரை, தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம், பாம்பன் குந்துகால் துறைமுகம் உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்தனர். இதைத் தொடர்ந்து புதிய ஜெட்டி பாலம் கட்டுவதற்கு ஐஐடி குழு சார்பில் கடலுக்குள் மணல் ஆய்வு செய்யப்பட்டது.

ராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்குவதற்கான புதிய ஜெட்டி பாலம் கட்ட ரூ.6.43 கோடி மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அக்னி தீர்த்த கடற்கரை அருகே அமையவுள்ள ‘டி’ வடிவிலான புதிய ஜெட்டிப்பாலம் 119 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகமும், 6 அடி உயரமும் உடையது. இதன் முதல் கட்ட பணியாக கடலுக்குள் இயந்திரங்களை நிறுத்த தேவையான நகர்வு மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த மேடைக்கான பாகங்கள் பொருத்தும் பணி ஓலைக்குடா பகுதியில் முழுவீச்சில் நடந்து வருகிறது.அதைத்தொடர்ந்து கடலுக்குள் கான்கிரீட் பில்லர் அமைக்கும் பணிகளை தொடர்ந்து, பால கட்டுமான பணிகள் நடைபெறும். புதிய ஜெட்டி பாலத்தின் பணிகள் இயற்கையின் கால சூழலுக்கு ஏற்றவாறு நடைபெறும் என்பதால், இந்தாண்டு இறுதியில் நிறைவு பெற வாய்ப்புள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.

The post ராமேஸ்வரம்-தலைமன்னாருக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து appeared first on Dinakaran.

Read Entire Article