ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (அக்.2) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேசுவரத்தில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அந்தப் படகுகளில் இருந்த 17 மீனவர்களும் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நீதிமன்றக் காவல் அக்டோபர் 10-ம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ளது.