'ராமநாதபுரம் வேதாளை மக்களுக்கு தனி அஞ்சல் குறியீடு வழங்க வேண்டும்' - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

4 months ago 20

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ஊராட்சியில் பறிக்கப்பட்ட தபால் நிலைய தரத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், 623804 என்ற தனி அஞ்சல் குறியீட்டை வேதாளை மக்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் வேதாளை கிராமம் என்பது மிகவும் பழைமையான பல நூற்றாண்டு பாரம்பரியமிக்க கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் சிறுபான்மை சமுதாய மக்களும், மீனவர்களும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். சுமார் 20,000 மக்கள் தொகையைக் கொண்ட இந்த ஊராட்சியில் 6,000 வாக்காளர்கள் உள்ளனர்.

பல ஆண்டுகளாக 623804 என்ற அஞ்சல் குறியீட்டைக் கொண்ட இந்த ஊராட்சியின் தபால் நிலையம் GDS SO என்ற தரமுடைய தனி அஞ்சல் அலுவலகமாகச் செயல்பட்டு வந்தது. கிராம மக்களிடம் எந்த வித கருத்தும் கேட்கப்படாமல், திடீரென அஞ்சல் துறையினர் கடந்த 2010-ம் ஆண்டு இந்த தபால் நிலையத்தின் தரத்தை (GDS BO) எனக் குறைத்து, 623519 என்ற அருகிலுள்ள மண்டபம் முகாமின் பகுதிநேர அலுவலகமாக இவ்வலுவலகத்தை மாற்றியுள்ளார்கள்.

இந்த கிராமத்தின் பெரும்பான்மை மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக வளைகுடா நாடுகளுக்குச் சென்று வேலை செய்து வரும் நிலையில், அவர்களின் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்ற தேவைக்காகச் செல்லும்போது முகவரி மற்றும் இருப்பிட சரிபார்ப்புகளில் குழப்பம் ஏற்படுகிறது. அருகிலுள்ள மண்டபம் முகாமில் இலங்கை அகதிகள் வாழ்ந்து வருவதால், அதே அஞ்சல் குறியீட்டை வேதாளை மக்களும் பயன்படுத்தும் சூழல் உள்ளதால், பாஸ்போர்ட் சரிபார்ப்பில் வேதாளை மக்களை இலங்கை அகதிகளா என சந்தேகித்து பாஸ்போர்ட் நிறுத்தி வைக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

அதேபோன்று, அகதிகள் என்கிற சந்தேகத்தில் இந்த ஊர் மக்களுக்கு மூன்றுக்கு மேற்பட்ட முறை போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இது இந்திய குடிமக்களிடம் காட்டப்படும் பாரபட்சமாகவே பார்க்கப்படுகிறது. இந்த பாரபட்சமான அவலங்களைக் களைய, எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக, மாவட்ட கலெக்டர், மாவட்ட கண்காணிப்பாளர், தபால் துறை கண்காணிப்பாளர் என முக்கிய அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பாரம்பரியமிக்க வேதாளை ஊராட்சி பெயர் அடையாள அட்டைகளிலிருந்தும் நீக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. ஆகவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு, வேதாளை ஊராட்சியின் பழைய அஞ்சல் குறியீடான 623804 என்ற குறியீட்டை மீண்டும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வேதாளை அஞ்சல் அலுவலகத்தை மீண்டும் GDS SO என்ற தரத்தில் அமைய ஒன்றிய அரசிடம் வலியுறுத்தித் தீர்வு ஏற்படுத்தித் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

Read Entire Article