ராமநாதபுரம்,
ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரையும் அவசர அவசரமாக வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில், ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.