
பர்மிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ்வோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜடேஜா - சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த கூட்டணி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினர். அபார பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜடேஜா அரைசதத்தை கடந்தார். மறுமுனையில் சுப்மன் கில் 150 ரன்களை கடந்தார்.
இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 400 ரன்களை கடந்தது. அணியின் எண்ணிக்கை 414 ரன்களாக உயர்ந்தபோது இந்த கூட்டணியை ஒரு வழியாக இங்கிலாந்து பவுலர்கள் உடைத்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 89 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் - ஜடேஜா ஜோடி 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை இந்திய அணி 110 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 419 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 168 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.