ராமநாதபுரத்தில் பொதுமக்களை காரை ஏற்றி கொல்ல முயற்சி: இளைஞரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு

4 hours ago 4

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பொதுமக்களை காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்த இளைஞரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய ராமநாத பிரபுவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குதரவை அம்மன் கோயில் பகுதியில் இளைஞர் மது போதையில் 12 பேர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததில் ஒருவர் பலியானார். இதையடுத்து விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த மனோகரன் மகன் ராமநாதபிரபு 26. இவர் நேற்றுமுன்தினம் காரில் தெற்குதரவையில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். எதிரில் வாலிநோக்கத்திலிருந்து உப்பு ஏற்றி வந்த லாரி காரின் மீது மோதியதில் கார் கண்ணாடி உடைந்தது. லாரி டிரைவர் கார்த்திக்கும், ராமநாதபிரபுவுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற அம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்கு ஆதரவாக பேசினார்.

ராமநாதபிரபுவுடன் வந்த அம்மன்கோவிலை சேர்ந்த பழனிகுமார் 30, வள்ளிமாடன் வலசையை சேர்ந்த சிவா 35, தெற்கு தரவையை சேர்ந்த சாத்தையா 55, உள்ளூர் நபரான ராமநாதபிரபுவுக்கு ஆதரவளிக்காமல் எப்படி வெளியூரை சேர்ந்த டிரைவர் கார்த்திக்கு ஆதரவளிக்கலாம் என வாக்குவாதம் செய்தனர்.

அப்போது ராமநாதபிரபு தன்னுடன் காரில் வந்தவர்களை விட்டு விட்டு காரை ராமநாதபுரம் நோக்கி ஓட்டி 3 கி.மீ., பயணம் செய்து வந்த வழியிலேயே திருப்பினார். தனக்கு ஆதரவளிகாத நபர்கள் மீது ஆத்திரம் கொண்ட ராமநாதபிரபு மதுபோதையால் வெறியுடன் தன்னுடன் வாக்குவாதம் செய்தவர்கள் மீது காரை மோதினார்.

இதில் ராமநாதபிரபு நண்பர்கள் சாத்தையா, பழனிகுமார், சிவா, அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் 19, மனோஜ் 24, பிரசாத் 23, ரித்திக்குமார் 19, தெய்வேந்திரசூரியா 25 ஆகிய 8 பேர் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இதில் சாத்தையா பலியானார். உதயபிரகாஷ் 21, சுதர்சன் 18, தீனதயாளன் 18, மற்றொரு சுதர்சன் 20, ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாத்தையா இறந்ததால் விபத்து வழக்கை, கொலை வழக்காகப்பதிவு செய்து கேணிக்கரை போலீசார் ராமநாதபிரபுவை கைது செய்து கடலாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதயடுத்து ராமநாத பிரபுவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

The post ராமநாதபுரத்தில் பொதுமக்களை காரை ஏற்றி கொல்ல முயற்சி: இளைஞரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article