ராமநாதபுரத்தில் கனமழை- 15 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்

4 weeks ago 6

*சாலை துண்டிப்பால் 10 கிராம மக்கள் தவிப்பு

ராமநாதபுரம் : சாயல்குடி பகுதியில் பெய்த கனமழைக்கு 15 ஏக்கரில் பயிரிடப்பட்ட மிளகாய், மல்லி, வெங்காயம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மழையால் சாலை துண்டிக்கப்பட்டதால் 10 கிராம மக்கள், போக்குவரத்து வசதியின்றி தவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன் தினம் காலை முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் 1081.90 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 113.00மி.மீ, வாலிநோக்கத்தில் 114.மி.மீ, கடலாடியில் 109.00 மி.மீ பெய்துள்ளது. அதாவது 67.62 சதவீதம் மழை பெய்துள்ளது. இதனால் வழக்கத்தைவிட அதிக மழை பொழிவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடர்மழை காரணமாக மாவட்டத்திலுள்ள 40 சதவீத கண்மாய், குளம், பண்ணை குட்டை போன்ற நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன. சாயல்குடி அருகே கொக்கரசன்கோட்டை, கொண்டுநல்லான்பட்டி, வாலம்பட்டி, உச்சிநத்தம், முத்துராமலிங்கபுரம், வெள்ளையாபுரம், பிச்சையாபுரம், டி.கரிசல்குளம், டி.எம்.கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் ராமநாதபுரம், தூத்துக்குடி கடைசி எல்லையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக்கு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் ஒன்றியத்தை சேர்ந்த லட்சுமிபுரம், மாவிலோடை பகுதிகளிலிருந்து கண்மாய்களில் தண்ணீர் பெருகியும், நீர்வழித் தடங்களில் தண்ணீர் நிரம்பி அது வெளியேறி காட்டாறு வெள்ளமாக கஞ்சம்பட்டி ஓடையில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வி.சேதுராஜபுரத்திலிருந்து உச்சிநத்தம் செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணி தாமதமாக நடந்து வந்ததால், அந்த கட்டுமான பாதையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

அதே போன்று இப்பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் மிளகாய், மல்லி, வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த மழைக்கு பாதிப்புக்குள்ளாகி, மீண்டும் நாற்று வாங்கி இரண்டாம் முறையாக பயிரிட்டனர். இந்த நிலையில் தற்போது வந்துகொண்டிருக்கும் காட்டாறு வெள்ளத்தால் 15 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

சாயல்குடியிலிருந்து தரைக்குடி வழியாக தூத்துக்குடி செல்லும் சாலையிலிருந்து கொண்டுநல்லான்பட்டி, செவல்பட்டி செல்லும் சாலைகளில் தண்ணீர் செல்வதால் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

உச்சிநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை ஆகிய பகுதியில் மழைநீர் சூழ்ந்து கிடப்பதால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள், பொதுமக்கள் நடந்து செல்ல அவதிப்பட்டனர். இதனை போன்று ஓம்சக்திநகர், இளங்கோவடிகள்நகர் என நகராட்சி மற்றும் பட்டிணம்காத்தான் பஞ்சாயத்து எல்லையில் முக்கியமான இடங்களில் மழைநீர் சூழ்ந்து கிடப்பதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

நிவாரணம் வழங்க கோரிக்கை: எஸ்.தரைக்குடி வருவாய் பிர்காவில் 10 கிராமங்களை மழைநீர் சூழ்ந்து கிடப்பதால் உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு குடியிருப்புவாசிகள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகையால் உணவு பொருள் வழங்கவும், சாலையை சீரமைத்து போக்குவரத்தை இயக்கவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராமநாதபுரத்தில் கனமழை- 15 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம் appeared first on Dinakaran.

Read Entire Article