சென்னை: பாமக நிறுவன தலைவரான நானே இனி தலைவராகவும் செயல்படுவேன் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக செயற்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமித்ததற்கு அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பின்னர் பனையூர் அலுவலகத்தில் தன்னை நிர்வாகிகள் சந்திக்கலாம் என்று கூறி அன்புமணி மேடையில் இருந்து வெளியேறியிருந்தார். இதனால் ராமதாஸ், அன்புமணி இடையே வெளிப்படையாக மோதல் ஏற்பட்டது. பின்னர் ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பா.ம.க. தலைவராக நானே செயல்படுவேன் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் கூறியதாவது; பா.ம.க. நிறுவன தலைவரான நானே இனி தலைவராகவும் செயல்படுவேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டும் இளைஞர்களை வழிநடத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பாமக தலைவராக தற்போதுதான் பதவியேற்றுள்ளேன்; பாஜகவுடன் கூட்டணி பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என ராமதாஸ் பதில் அளித்தார்.
மேலும், பா.ம.க. செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார். அன்புமணியை பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து நீக்கியதற்கு பல காரணங்கள் உண்டு. அந்த காரணங்களை தற்போது கூற முடியாது. அன்புமணி நீக்கத்துக்கான காரணங்களை சிறுக சிறுக தெரிவிப்பேன். இவ்வாறு கூறினார். 2022ல் பாமக தலைவராக அறிவிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், தற்போது செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பியதாகவும் பாஜக கூட்டணியில் நீடிக்க அன்புமணி ஆர்வம் காட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸின் இந்த அதிரடி அறிவிப்பால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
The post ராமதாஸ் – அன்புமணி இடையே முற்றியது மோதல்.. பாமக நிறுவன தலைவரான நானே இனி தலைவராகவும் செயல்படுவேன்: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!! appeared first on Dinakaran.