*முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை மனு
ராதாபுரம் : ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட 52 குளங்களுக்கு பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதில் விடுபட்டு போன 15குளங்களுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ராதாபுரம் தாலுகா மழை மறைவு பிரதேசம் ஆகும். இதன் வறண்ட பகுதிக்கு கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து 150 கன அடி தண்ணீர் கொண்டு வருவதற்காக தோவாளை கால்வாய் வழியாக நிலப்பாறை என்ற இடத்திலிருந்து 1970ம் ஆண்டு ராதாபுரம் கால்வாய் வெட்டப்பட்டு, 15,987 ஏக்கர் நிலம் நேரடி பாசனம் முறையிலும், 1.013 ஏக்கர் நிலம் 52 குளங்கள்மூலம் பாசனம் பெறும் வகையிலும் வடிவமைத்து கட்டப்பட்டது.
மேற்படி பாசன கால்வாய் வெட்டப்பட்ட நாள் முதல் இதுவரை நேரடி பாசனத்திற்கு தண்ணீர் விடுவதேயில்லை. நேரடி பாசனத்திற்கு நீர் விடுவிக்கப்படாத காரணத்தினால் 52 குளங்களையாவது நிரப்பி, அதன் மூலம் நிலத்தடி நீரை சற்று உயர்த்தினால், குடிநீர் பற்றாக்குறை தீர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால், 52 குளங்களையும் நிரப்புவதற்காக விவசாயிகள் ஒவ்வொரு முறையும் 160 கட்டப்போராட்டங்களை நடத்திவந்த நிலையில் தாங்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தான் 150 கன அடி தண்ணீர் வீதம் மேற்படி குளங்களுக்கு நீர் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, 52 குளங்களுக்கும் தற்போது நீர் வந்துகொண்டிருக்கிறது.
நேரடி பாசனத்திற்காக வடிவமைக்கப்பட்ட விஜயாபதி கிராமத்தில் உள்ள அரசர்குளம், கொடிகுளம், கன்னிதுலாகுளம், காடுதுலாகுளம், பரவர்குளம், மாதாபுதுகுளம், கொத்தன்குளம், அழகநேரிகுளம்.
செம்பாலைகுளம், மிஷன்குளம், காமனேரிகுளம், குறிஞ்சிகுளம் மற்றும் கூடங்குளம் கிராமத்தில் உள்ள மருதங்குளம், சானார்குளம் மற்றும் உப்பிலிபாடுகுளம் உள்ளிட்ட 15 குளங்களுக்கும் நேரடி பாசன முறையில் தண்ணீர் வரவில்லை. மேற்குறிப்பிட்ட 15 குளங்களும் குளத்துப் பாசனத்திலும் சேர்க்கப்படாததால், அப்பகுதிகள் தொடர்ந்து வறட்சியாகவே இருந்து வருகிறது.
ஆகவே,நேரடி பாசனமும் இல்லாமல் குளத்துப்பாசனத்திலும் சேர்க்கப்படாத மேற்படி 15 குளங்களையும், 52 குளங்களோடு சேர்த்து குளத்துப் பாசனத்தில் சேர்ப்பதற்கும், மேலும், மேற்படி பணியினை நீர் வளத்துறை அதிகாரிகள் மூலம் விரைந்து ஆய்வு செய்து, உரிய அரசாணையை இந்த ஆண்டே பிறப்பிக்மாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கோரியுள்ளார். முன்னதாக மேற்கண்ட கிராமப்புற குளங்களை சேர்ந்த விவசாயிகள், சபாநாயகர் அப்பாவுவை அவரது இல்லத்தில் கோரிக்கையுடன் சந்தித்தனர்.
The post ராதாபுரம் தொகுதியில் விடுபட்ட 15குளங்களுக்கு பேச்சிப்பாறை தண்ணீர் திறக்க நடவடிக்கை appeared first on Dinakaran.