வாலாஜா: கள்ளக்காதல் பிரச்னையில் மாமியாரை நள்ளிரவு அடித்துக்கொன்ற தொழிலாளி மனைவியின் கள்ளக்காதலனின் பெற்றோரை அதிகாலை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்புதுப்பேட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பாரதி (46), கூலித்தொழிலாளி. இவர்களது மகள்கள் புவனேஸ்வரி (23), ராஜேஸ்வரி (21). இருவருக்கும் திருமணமாகிவிட்டது. புவனேஸ்வரிக்கும் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சி புதுகுடியானூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலு (30) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு சாஸ்விகா (4) என்ற மகள் உள்ளார். பாலு, சரிவர வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் இருந்து வந்தாராம். பாலுவின் எதிர்வீட்டை சேர்ந்தவர் விஜய் (26). இவர் ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
பாலுவும், விஜய்யும் நெருங்கிய உறவினர்கள். இந்நிலையில் விஜய்க்கும், புவனேஸ்வரிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பாலு, மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மேலும் வேலைக்கும் செல்லவில்லையாம். இதனால் புவனேஸ்வரி, தனது குழந்தையை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு தாய் வீட்டுக்கு சென்று தங்கி விட்டார். இதேபோல் புவனேஸ்வரியின் தங்கை ராஜேஸ்வரியும், தனது கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு வந்துவிட்டாராம். இதனால் தாய் மற்றும் 2 மகள்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஓசூரில் இருக்கும் விஜய் வாரத்தில் சில நாட்கள் தனது பெற்றோரை பார்க்க புதுகுடியானூர் வந்து தங்குவாராம். அப்போது புவனேஸ்வரியும், விஜயும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருப்பார்களாம். விஜய்யுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் புவனேஸ்வரி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளாராம்.
இதையறிந்த பாலு, மாமியார் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மாமியாரிடம் அடிக்கடி தகராறு ெசய்துள்ளார். இதேபோல் நேற்றிரவு பாலு, மாமியார் பாரதி வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவியிடம் தகராறு செய்தார். தன்னையும், மகளையும் தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்து கர்ப்பம் அடைந்துள்ளாயே? எனக்கேட்டுள்ளார். அப்போது மாமியார் பாரதி, `நீ குடும்பம் சரிவர நடத்தாமல் இருந்ததால்தான் எனது மகள் என்னிடம் தங்கி இருக்கிறாள்’ எனக்கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பாலு, `எனது மனைவி குடும்பம் நடத்தாமல் கள்ளக்காதலனுடன் இருப்பதற்கு காரணம் நீதான்’ எனக்கூறி தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் சரமாரி தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதி, வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓடினார். இதைக்கண்ட அவரது 2 மகள்களும் தாயை காப்பாற்ற ஓடினர்.
இருப்பினும் அங்குள்ள தெரு வழியாக தப்பியோடிய பாரதியை, ஓடஓட விரட்டி இரும்பு ராடால் பாலு சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். இதையடுத்து அங்கிருந்து பாலு தப்பியோடினார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வாலாஜா போலீசாருக்கு ெதரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரம் தீராத பாலு, விஜய்யை தீர்த்துக்கட்ட எதிரே உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இல்லை. இதனால் அவர்கள் அதேபகுதியில் புதிதாக கட்டி வரும் புது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கும் விஜய் இல்லை. ஆனால் அவரது தந்தை அண்ணாமலை (60), தாய் ராஜேஸ்வரி (55) ஆகியோர் மட்டுமே இருந்தனர்.
அவர்களிடம் பாலு, `உங்கள் மகனால் எனது குடும்பமே சீரழிந்துவிட்டது’ எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலு, பாரதியை தாக்கிய அதே இரும்பு ராடால், விஜய்யின் தாய் ராஜேஸ்வரியை சரமாரி தாக்கியுள்ளார். இதில் தலையில் ரத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அண்ணாமலை கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தார். ஆனால் அவரையும் பாலு, ஓடஓட இரும்பு ராடால் சரமாரி தாக்கினார். இதில் அவரும் தலையில் படுகாயமடைந்தார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் பாலு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அண்ணாமலை மற்றும் ராஜேஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்ற நிலையில் அவர்கள் இறந்துவிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய பாலுவை தேடி வந்தனர். கொண்டபாளையம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேரை கொலை செய்ததற்கு பயன்படுத்திய இரும்பு ராடை பறிமுதல் செய்தனர். மாமியார் மற்றும் மனைவியின் கள்ளக்காதலனின் பெற்றோரை அடித்துக்கொலை செய்த சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு பாலு, மாமியார் பாரதி வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவியிடம் என்னையும், மகளையும் தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்து கர்ப்பம் அடைந்துள்ளாயே? எனக்கேட்டு தகராறு செய்தார்.
The post ராணிப்பேட்டையில் நள்ளிரவு பயங்கரம்; மாமியார், மனைவியின் காதலனின் பெற்றோரை இரும்பு ராடால் தாக்கி கொன்ற தொழிலாளி appeared first on Dinakaran.