ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை சுட்டு பிடித்த போலீசார்

3 hours ago 1

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவு 12 மணியளவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினர். காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால், அதன் மீதே குண்டுகள் விழுந்தன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பெட்ரோல் குண்டு வீசியவர்களை விரைந்து பிடிக்கவும் 2 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் பழைய குற்றவாளிகள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்த சென்று ஹரி என்ற நபர் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை ஹரி கத்தியால் குத்த முயன்றதால், தற்காப்புகாக கால் முட்டிக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஹரி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் இரண்டு காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article