
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு பேராட்சியார் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் (AGOT) நிதியின்கீழ் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில், கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி (Radio Frequency Ablation Machine) சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
"சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.42 இலட்சம் செலவிலான புற்றுநோய் மற்றும் நாள்பட்ட சிகிச்சைக்காக கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவை தற்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
புற்றுநோய் மற்றும் மூட்டு வலியால் வரும் கடுமையான வலிகளுக்கு உரிய நிவாரண சிகிச்சைகள் 2013-ம் ஆண்டு முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் செய்யப்பட்டு வருகிறது. நாள்பட்ட வலி என்பது 3 மாதத்திற்கு தொடர்ச்சியாக நிலையாக ஒரே இடத்தில் இருக்கும் வலி.
மேலும் கை, கால்களில் ஏற்படும் வலி, எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வாத நோய், புற்றுநோயால் ஏற்படும் பலவித வலி நோய்களால் அன்றாட வாழ்க்கை முறையில் சோம்பலை ஏற்படுத்தும். தூக்கமின்மையை உண்டாக்கும். தற்கொலை போன்ற உணர்வுகளுக்கு பெரிய அழுத்தத்தை உண்டாக்கும்.
எனவே மருந்து, மாத்திரை, ஊசிகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத வலிகளுக்கு கதிரியக்க அதிர்வெண் நீக்கம் மூலம் உடம்பில் எந்தவித பாகத்திற்கும் பக்க விளைவுகள் ஏற்படாமல் வலி நிவாரணம் அளிக்க முடியும். இதன் மூலம் தினப் பராமரிப்பு நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள். மாதத்திற்கு சுமார் 50 முதல் 60 நோயாளிகள் வரை இந்த சிகிச்சைகள் மூலம் பயனடைய முடியும்.
இந்த சிகிச்சையானது பொதுவாக, தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் பெற வேண்டும் என்று சொன்னால், ஒரு நோயாளிக்கு சுமார் ரூ.50,000/- முதல் ரூ.1,00,000/- வரை செலவாகும். ஆனால் இந்தக் கருவிகள் மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மயக்கத்துறையில் நாள்பட்ட வலி நிவாரண மையத்தின் மூலம் இந்த சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது.
எனவே இத்தகைய சிறப்புக்குரிய இக்கருவி அரசு பேராட்சியார் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் (AGOT) நிதியின்கீழ் ரூ.42 லட்சம் செலவில் நீதியரசர்கள் இம்மருத்துவமனைக்கு தந்து பெரிய அளவில் பயன்பெற உதவியிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து, சம்மந்தபட்ட அனைவருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழுநோய் பொறுத்தவரை விழிப்புணர்வு முகாம் 30.01.2025 முதல் 15.02.2025 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தொழுநோய் பரிசோதனைகள் 13.02.2025 முதல் 28.02.2025 வரை நடைபெறுகிறது. தொழுநோய் பரிசோதனைகள் 13.02.2025 அன்று மட்டும் 133 வட்டாரங்களிலும், 27 நகரப்பகுதிகளிலும் 3,42,241 வீடுகளில் 10,67,675 பேர் பயன்பெறும் வகையில் பரிசோதனைகள் நடைபெற்றது.
நாய்க்கடி, பாம்புக்கடிகளுக்கான மருந்து 3 ஆண்டுகளுக்கு முன்னாள் வரை வட்டார மருத்துவமனை, வட்டம் சாரா மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் தான் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசுப் பொறுப்பேற்றபிறகு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் குறிப்பாக 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ASV என்று சொல்லக்கூடிய பாம்புக்கடி மருந்துகளும், ARV என்று சொல்லக்கூடிய நாய்க்கடி மருந்துகளும் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு, நான் தினந்தோரும் ஆய்வு மேற்கொள்கிற அனைத்து மருத்துவமனைகளிலும் தொடர்ச்சியாகவே கண்காணித்து வருகிறேன்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையைப் பொருத்தவரை 2021 மே 7-க்கு முன்னாள் தினந்தோருமான புறநோயாளிகளின் எண்ணிக்கை 8,000 ஆக இருந்தது. அது இன்றைக்கு 19,000 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் தற்போது அரசு மருத்துவ சேவையை பொது மக்கள் அதிக அளவு பயன்படுத்த விரும்புகின்றனர்."
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.