
கவுகாத்தி,
பிரதமர் மோடி அசாமுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, கவுகாத்தி விமான நிலையத்திற்கு சென்றடைந்த அவரை அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா வரவேற்றார். அவருக்கு சில பரிசுகளையும் வழங்கினார்.
இதுபற்றி சர்மா வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், உலகின் மிக பிரபலம் வாய்ந்த தலைவரான பிரதமர் மோடியை அசாமுக்கு வரவேற்பது என்பது தனியுரிமை மற்றும் கவுரவம் வாய்ந்தது. பிரதமரின் தொலைநோக்கு பார்வையானது, வளர்ச்சியடைந்த அசாம் உருவாவதற்காக உழைக்கும் எங்களுடைய செயலை இயக்குகிறது என தெரிவித்து உள்ளார்.
இதன்பின்னர், சாருசஜாய் ஸ்டேடியத்தில் ஜுமோயிர் பினந்தினி என்ற நிகழ்ச்சி நடந்தது. அசாமின் பழங்குடி மற்றும் ஆதிவாசி சமூகத்தினரின் நாட்டுப்புற நடனத்தின் பெயரே ஜுமோயிர் என அழைக்கப்படுகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய, ஒற்றுமை மற்றும் கலாசார பெருமை மற்றும் அசாமின் ஒருங்கிணைந்த கலாசார கலவையின் அடையாளம் ஆகியவற்றிற்கான எடுத்துக்காட்டாக இந்த நடனம் உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கூடியிருந்த மக்களை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி, அசைத்து அவர்களுக்கு வாழ்த்து கூறினார்.
கலைஞர்களின் நிகழ்ச்சியை காண ஆர்வத்துடன் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக அசாம் அரசு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூடி நடனம் ஆடி உற்சாகப்படுத்தினர்.
பிரதமர் மோடி, அசாம் 2.0-வை நாளை தொடங்கி வைக்க உள்ளார். இந்த பெரிய அளவிலான உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான உச்சி மாநாட்டில், பல்வேறு மத்திய மந்திரிகள், தொழிலதிபர்கள், தலைவர்கள் மற்றும் தூதர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.