*விவசாயத் தொழிலாளர் சங்கம் கலெக்டரிடம் மனு
நாகர்கோவில் : அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க குமரி மாவட்டக்குழு தலைவர் கண்ணன், செயலாளர் மலைவிளை பாசி மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது :
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட மேலகிருஷ்ணன்புதூர், செம்பொன்கரை, நரையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இதில் கல்லூற்று, தேங்காய்பெரை ஊற்று, கல்லடி ஊற்று, ஆலடிஊற்று போன்ற பல பாரம்பரியமான ஊற்றுகள் இருந்து வந்தன.
இவ்ஊருணிகள் அனைத்தும் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த காலங்களில் வட்டார மக்கள் ஊருணிகளை குளிப்பதற்கும், பசு, கன்றுகளை குளிப்பாட்டுவதற்கும் பெரிதும் பயன்படுத்தி வந்தனர். இவ் ஊருணிகளிலிருந்து செல்லும் புறக்கால்வாய்கள் மூலம் தண்ணீர் நெல், வாழை, தென்னை விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டும் வந்தது.
இந்நிலையில் பாரம்பரியமாக பயன்பாட்டிலிருந்த பல ஊருணிகள் தனியாரால் ஆக்ரமிக்கப்பட்டும், மண்மூடி அபகரிக்கப்பட்டும் காணப்படுகின்றன. குறிப்பாக தர்மபுரம் கிராம பகுதியில் உள்ள ஊருணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து வரும் நிலையில் உள்ளன. இதில் ஒருசில ஊருணிகள் அளவீடு செய்யப்பட்டு எல்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பல ஊருணிகள் மண் மூடியும், குப்பைகள் நிறைந்தும் அழிந்து வரும் நிலையில் உள்ளன. இதனால் அருகாமையில் உள்ள கடலிலிருந்து உப்புநீர் உட்புகுந்து குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
எனவே ஆக்ரமிக்கப்பட்டு, அழிந்து வரும் நிலையிலும் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஊருணிகளை கண்டறிந்து மீட்டிட வேண்டும். மேலும் அனைத்து ஊருணிகளையும் தூர்வாரி நன்னீர் ஆதாரத்தை ஏற்படுத்தி, ஊருணிகளை சுற்றி சுவர் எழுப்பி பாதுகாத்திட வேண்டும். இதனால் குடிநீர் ஆதாரம் மேம்படும். இதனால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதியில் ஆக்ரமிக்கப்பட்டுள்ள ஊருணிகளை மீட்க வேண்டும் appeared first on Dinakaran.