
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் கொடா மாவட்டத்தில் கொடா மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தவர் சுனில் பைர்வா (வயது 28). அவர் தங்கியிருந்த விடுதி அறையில் மின் விசிறியில் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுபற்றி மகாவீர் நகர் காவல் நிலைய ஏ.எஸ்.ஐ. மோகன்லால் கூறும்போது, இந்த விவரம் அறிந்ததும் போலீசார், விடுதிக்கு சென்று சுனிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில், பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாத இயலாமையை வெளிப்படுத்தி சுனில், மன்னிப்பை கோரியிருக்கிறார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள், முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுனிலின் தந்தி கஜோத்மல் கூறும்போது, நீட் தேர்வை எழுதி முடித்து பின்பு, 2019-20-ம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் படிக்க அனுமதி கிடைத்தது.
எனினும், முதலாம் ஆண்டில் உள்நோக்கத்துடன் கல்லூரி நிர்வாகத்தினர், சுனிலை தேர்ச்சி பெற செய்யவில்லை. நாங்கள் இதனை எதிர்த்து, சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் முறையீடு செய்தோம். இதன்பின்னர் நடந்த மறுமதிப்பீட்டில், 7 முதல் 8 மாதங்களுக்கு பின்னர் சுனில் தேர்ச்சி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.
2-ம் ஆண்டில் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டான். எனினும், 3-ம் ஆண்டில் தேர்வில் மோசடி செய்ததற்காக பிடிபட்டான். இதனால், அவனுடைய 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, ஒன்றரை ஆண்டுகளாக கல்லூரிக்கு வர சுனிலுக்கு தடை விதிக்கப்பட்டது என கூறியுள்ளார்.
இந்த விசயம் பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் பேச சுனில் முற்பட்டபோது, வருத்தப்படும் வகையிலான சம்பவம் நடந்துள்ளது. சுனிலை திட்டி, திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால், கடந்த 3 மாதங்களாக மனதளவில் சுனில் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால், இந்த துயர முடிவை அவன் எடுத்துள்ளான் என சுனிலின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இந்த கல்லூரியில் எல்லா மாணவர்களும் சமஅளவில் நடத்தப்படுவதில்லை என மூத்த மாணவரான கமல் என்பவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். சுனிலின் குடும்பத்தினர் அளிக்கும் புகார் அடிப்படையில், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி விசாரிக்க, 5 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என கல்லூரி முதல்வர் சங்கீதா சக்சேனா கூறியுள்ளார்.