பணய கைதிகளை விடுவிக்கவில்லை எனில்... ஹமாசுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

3 hours ago 2

வாஷிங்டன்,

காசா மீது ஓராண்டாக இஸ்ரேல் நடத்திய தாக்குதல், முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டது. 6 வார கால முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஆனது, பரஸ்பரம் இருதரப்பு பணய கைதிகள் விடுவிப்பின் வழியே அமைதியாக முடிவடைந்தது. எனினும், 2-ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.

இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேல் பணய கைதிகளை டிரம்ப் சந்தித்து விட்டு திரும்பினார். இதன்பின்னர் டிரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், பணய கைதிகள் அனைவரையும் விடுவியுங்கள். தாமதம் செய்ய வேண்டாம்.

நீங்கள் படுகொலை செய்த நபர்களின் இறந்த உடல்கள் எல்லாவற்றையும் உடனடியாக திரும்ப ஒப்படையுங்கள். இல்லையெனில் விளைவு உங்களை சார்ந்ததே என எச்சரிக்கும் வகையில் பதிவிட்டு உள்ளார். இது உங்களுக்கான கடைசி எச்சரிக்கை. ஹமாஸ் தலைமை காசாவை விட்டு வெளியேறும் தருணம் இது. உங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது.

காசா மக்களுக்கு அழகானதொரு வருங்காலம் காத்திருக்கிறது. ஆனால் பணய கைதிகளை நீங்கள் வைத்திருந்தால் அது இல்லை. அப்படி பணய கைதிகள் உங்களிடம் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் மரணமடைந்து விட்டீர்கள் என வைத்து கொள்ளுங்கள் என மிரட்டலாக தெரிவித்து உள்ளார்.

ஹமாஸ் அமைப்பு சிறை பிடித்த, மீதமுள்ள பணய கைதிகளை விடுவிக்கவில்லை என்றால், நீங்கள் நினைத்து பார்க்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்து இருந்த நிலையில், டிரம்ப் இதனை தெரிவித்து உள்ளார்.

இந்த சூழலில், இந்த முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், ஏப்ரல் மாதத்தின் முதல் பாதி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் விருப்பம் தெரிவித்தது. ஆனால், நிரந்தர போர் முடிவுக்கான 2-ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியது.

இந்த சூழலில், காசாவுக்கான அனைத்து நிவாரண பொருட்களுக்கும் இஸ்ரேல் தடை விதித்து மிரட்டியுள்ளது. அதனுடன், இஸ்ரேலின் புதிய ராணுவ தலைவர் இயால் ஜமிர், எங்களுடைய தாக்குதல் இன்னும் முடியவில்லை. ஹமாஸ் கடுமையாக அடி வாங்கியுள்ளது. ஆனால், இன்னும் வீழ்த்தப்படவில்லை என நேற்று எச்சரித்து இருந்தது கவனிக்கத்தக்கது.

Read Entire Article