ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பைகானேரில் உள்ள மகாஜன் பயிற்சி தளத்தில், ராணுவ வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெடி பொருட்களை பீரங்கியில் ஏற்றிய சமயத்தில் எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் அசுடோஷ் மிஸ்ரா மற்றும் ஜிதேந்திரா ஆகிய 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மற்றொரு ராணுவ வீரர், சிகிச்சைக்காக சண்டிகருக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அனுப்பு வைக்கப்பட்டார்.
உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் சூரத்கர் ராணுவ தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதில் அசுடோஷ் மிஸ்ரா உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் மற்றும் ஜிதேந்திரா ராஜஸ்தானை சேர்ந்தவர் ஆவார். முன்னதாக இதே பயிற்சி தளத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பயற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் சந்திர பிரகாஷ் பட்டேல் என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.