ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

3 months ago 21

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் ஐகோர்ட்டில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தவர் மணீஷ் குமார் சைனி. சில மாதங்களாக இவருக்கு சம்பளம் சரிவர வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஐகோர்ட்டு வளாகத்தில் அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர் கோர்ட்டு வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஐகோர்ட்டுக்கு வெளியே சாலைகளை மறித்து வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவருடைய சகோதரர் ரவீஷ் சைனி கூறும்போது, கிளார்க் பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த மணீஷ், ஐகோர்ட்டில் நிரந்தர ஊழியர் ஆவதற்கு விரும்பினார். இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அவருக்கு தினசரி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இதன்படி, ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4.5 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். அந்த பணம் முழுவதும் போக்குவரத்து செலவுக்கே போய் விடும். அதனால், இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார் என கூறியுள்ளார்.

இந்த சூழலில், ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளம் திருத்தியமைக்கப்பட்டு வருகிற அக்டோபர் முதல் அமலுக்கு வர உள்ளது. இதன்படி, இளநிலை கிளார்க் பணிக்கு ரூ.5,600-ல் இருந்து ரூ.14 ஆயிரம் என சம்பளம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மணீஷ் மறைவை அடுத்து வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, கூடுதலாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும். அவருடைய மனைவி சீமா குமார் சைனிக்கு வேலை வழங்குவதற்கான உத்தரவாதமும் அளிக்கப்பட்டு உள்ளது.

Read Entire Article