
பர்மிங்காம்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்) அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 184 ரன்களுடன் இருந்தார். ஹாரி புரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் 28 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். லோகேஷ் ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த இன்னிங்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டாங் வீசிய 8-வது ஓவரில் ஜெய்ஸ்வால் எல்பிடபிள்யூ ஆனார். பந்து காலில் பட்டதும் இங்கிலாந்து வீரர்கள் அப்பீல் செய்தனர். உடனே கள நடுவர் அவுட் வழங்கினார். இதனையடுத்து ஜெய்ஸ்வால் மறுமுனையில் இருந்த கே.எல். ராகுலிடம் பேசினார். ஆனால் அவர் பேசி முடிவதற்குள் நிர்ணயிக்கப்பட்ட 15 நொடிகள் முடிந்து போனது. இறுதியாக ராகுல் ஆலோசனையை ஏற்ற ஜெய்ஸ்வால் டிஆர்எஸ் எடுப்பதற்கு சைகை காட்டினார். அதை களத்தில் இருந்த நடுவரும் ஏற்றுக்கொண்டு 3-வது நடுவரை ரிவியூ எடுக்குமாறு அழைத்தார்.
அதைப் பார்த்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜெய்ஸ்வால் டிஆர்எஸ் எடுப்பதற்கு முன்பாகவே நேரம் முடிந்து விட்டதாக களத்திலிருந்த நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே நீங்கள் இந்த ரிவியூவை ஏற்கக்கூடாது என்று நடுவருடன் சண்டையிட்டார். இருப்பினும் கே.எல்.ராகுல் மற்றும் நடுவர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இதனிடையே ரசிகர்களும் நடுவருக்கு எதிராக கூச்சலிட்டதால் மைதானத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் ரிவியூவிலும் ஜெய்ஸ்வால் எல்பிடபிள்யூ ஆனது தெளிவாக தெரிய வந்ததால் 3வது நடுவரும் அவுட் வழங்கினார். இதனையடுத்து சர்ச்சை எந்த வித பிரச்சினையும் இன்றி முடிவுக்கு வந்தது.