
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 217 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரிக்கெல்டன் 61 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 218 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ராஜஸ்தான் அணி, மும்பை வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக 100 ரன் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது.
மும்பை தரப்பில் அதிகபட்சமாக பவுல்ட், கரண் சர்மா ஆகியோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் பவுல்ட் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு அணியாக நாங்கள் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?. பேட்ஸ்மேன்கள் தற்போது மீண்டும் பார்மிற்கு வந்து பெரிய அளவில் ரன்களை குவிக்கிறார்கள். 210 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் வெற்றிக்கு போதுமான ரன்கள் என்று நினைத்தோம்.
அதேவேளையில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவர்களை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் அணியில் துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி ஆகியோர் ஹிட்டர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்கள் எங்களுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்.
ஆனாலும் பும்ரா எங்கள் அணிக்குள் வந்ததிலிருந்து பெரிய அளவில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. முதல் சில போட்டிகளை அவர் தவறவிட்டிருந்தாலும் அவர் வந்ததற்கு பின்னர் எங்களுடைய அணியின் செயல்பாடு ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது. இனிவரும் போட்டிகளிலும் இந்த வெற்றி அப்படியே தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.