
ஜெய்ப்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சாமி தரிசனத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜம்வா ராம்கர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். டவுசா-மனோகர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களுடைய கார் நள்ளிரவில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது கார் டிரைவர் கண் அசந்து தூங்கியதாக தெரிகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்து நிலைதடுமாறியது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்பக்கமாக மோதியது. மோதிய வேகத்தில் காருடன் சேர்ந்து அந்த லாரியும் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அப்பளம்போல் நொறுங்கிய காரில் சிக்கி 6 மாத பெண் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேர் செத்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் மீட்கப்பட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.