
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது. முன்னதாக, பிப்ரவரி 22-ந் தேதி முதல் 28-ந் தேதிக்குள் குறிப்பிட்ட நாளில் செய்முறை தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள். 12 ஆயிரத்து 480 பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவிகள் 4,113 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வை எழுதினார்கள்.
தேர்வு தொடங்கிய முதல் நாளான மார்ச் 28-ந் தேதி தமிழ், ஏப்ரல் 2-ந் தேதி ஆங்கிலம், 4-ந் தேதி விருப்ப மொழி, 7-ந் தேதி கணிதம், 11-ந் தேதி அறிவியல் என குறிப்பிட்ட இடைவெளியில் தேர்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில், கடைசி தேர்வான சமூக அறிவியல் இன்று நடந்து முடிந்தது.
அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவ - மாணவிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கப்பட இருக்கிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் 19-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.