ராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி விபத்து; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

6 months ago 25

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் (பெட்ரோல் பங்க்) ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் வெளியே லாரிகள் உள்பட பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசிந்து தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ பெட்ரோல் பங்க் மற்றும் அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் மற்றும் பிற வாகனங்களில் பரவியது. அதுமட்டும் இன்றி கியாஸ் டேங்கர் லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்களும், சாலையின் எதிர் திசையில் வந்த வாகனங்களும் இந்த விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்தன. இந்த பயங்கர தீ விபத்தில் டேங்கர் லாரிகள் மற்றும் கன்டெய்னர் லாரிகள், பஸ், ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் என மொத்தம் 37 வாகனங்கள் தீக்கிரையாகின.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article