ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 10 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு: உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

2 days ago 3

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் கோட்புட்லி பகுதியில் 700 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 10 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டது. கிர்தாபுரா என்ற இடத்தில் கடந்த டிச.23ம் தேதி ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அவரது பெற்றோர் தேடிய நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது. ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்த தகவல் தரப்பட்டு உடனடியாக தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் வரவழைக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க குழாய் வழியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

குழந்தைக்கு ஆக்சிஜன் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் உணவு ஏதும் வழங்கப்படாததால் உடல்நிலை மோசமானது. ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சித்த நிலையில் பலன் தரவில்லை. ஜெய்பூர், டெல்லியில் இருந்து மெட்ரோ ரயில் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சுரங்கம் தோண்டப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையை மீட்கும் முயற்சி 5 முறைக்கும் மேல் தோல்வி அடைந்த நிலையில் இறுதியாக ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் சுமார் 12 அடி வரை சுரங்கம் தோண்டி மீட்புக் குழு குழந்தையை உயிருடன் மீட்டது

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக நடந்த மீட்புப் பணியால் 10 நாட்களுக்குப் பின் குழந்தை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 10 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு: உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article