ராஜபாளையம், மார்ச் 20: ராஜபாளையத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் அகில இந்திய கோரிக்கை தினத்தை முன்னிட்டு மார்ச் 18ம் தேதி முதல் 3 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 26ம் தேதி வரை நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் பஞ்சாலைத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன் தலைமையில் விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சோமசுந்தரம், விசைத்தறி தொழிலாளர்கள் சங்க உதவி தலைவர் சந்தனகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள என்டிசி பஞ்சாலைகளை உடனே இயக்க வேண்டும், குறைந்தபட்ச பென்ஷன் ரூ.9000 வழங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாக உயராமல் உள்ள பென்ஷன் தொகையை உயர்த்த வேண்டும், கூட்டுறவு பஞ்சாலைகளை முன்மாதிரியாக இயக்க வேண்டும், குறைந்தபட்ச கூலி நிர்ணயக் குழுவை செயல்படுத்த வேண்டும், இபிஎப் பென்ஷன்தாரர்களுக்கு சமூக பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும், 480 நாட்கள் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் முனியாண்டி, போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் காத்தப்பன், சிஐடியூ கன்வீனர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ராஜபாளையத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.