ராஜகோபுர மனசு 5

3 months ago 26

ரவீந்திரப் பெருந்தச்சன் கோபுரங்கள்போல மரங்களில் செதுக்கியிருந்த மாதிரிகளையே பார்த்துக் கொண்டிருந்தார். கோபுரங்களின் பின்னணியில் மலைபோல, மாதிரியமைத்திருந்தார்கள். மேசையிலிருந்த மாதிரியில், மற்ற திசைக் கோபுரங்களையெல்லாம்விட, கிழக்குகோபுரம் இருமடங்கு உயரத்திலிருந்தது. அதாவது கிழக்கு கோபுரத்தின் உயரத்தில், பாதி உயரமே இருக்கும்படியாக மற்ற கோபுரங்கள் இருந்தன. மாதிரிகளை பார்த்துக் கொண்டிருந்த தலைமை ஸ்தபதி, அப்படியே திரும்பி, மெல்ல விடிகிற வெளிச்சத்தில், நட்சத்திரங்களின் சுடரொளித்தாக்கத்தில், படுத்திருக்கும் கோலத்திலிருந்த அருணைமலையை, விழிகள் நகர்த்தாது பார்த்தார். கண்கள்மூடி ஏதோ யோசித்தவர், பரவசமானார். அதே பரவசத்தோடு மலையை நோக்கி, மனதுக்குள் பேச
ஆரம்பித்தார்.

‘‘வெட்டவெளி நிலத்தில், மலையின்காலடியில் நான்குதிசைகளிலும் கோபுரங்கள். நடுநாயகமாய் நீ. ஏய்யப்ப்பா. இது உனதாசையா? இல்லை, மன்னரின் கனவா? ஆசைகளுக் கெல்லாமப்பாற்பட்டவன் நீ. உனக்குமாசையுண்டாயென்ன. இது உன்னாசையில்லை. பிள்ளைகளாசைப்பட, புதுப்பட்டு உடுத்திக்காட்டும் அப்பன்போல, எங்களாசைக்கு நீ இணங்கியிருக்கிறாய், அவ்வளவே’’‘‘படுத்திருக்கும் ஈசன், இங்கெல்லோரும், உம்மை அப்படித்தான் சொல்கிறார்கள். உண்மையில் நீ துடிப்புள்ள ஜீவன்தான். இந்த நிலத்தில் நடுமையத்தில், உயிராற்றலுடன் துடிக்கிற ஆத்மன்தான். ஆனால், எனக்கென்னவோ உறங்கும்சிவனாக தோன்றவில்லை. ஒருக்களித்துப்படுத்து, உறங்காதிருந்து விழித்து, ஒருதாய்போல, இந்தப் பிரபஞ்சத்தைக் காக்கும் சக்தியாகத்தான் தோன்றுகிறது.’’ரவீந்திர பெருந்தச்சன் மலையுடன் பேசுவதை நிறுத்திவிட்டு தனக்குள் பேச ஆரம்பித்தார்.

‘‘உற்றுக்கவனிக்க, இம்மலை தாய்மையுடன் மூச்சுவிடுதலை உணரமுடியும். இதை உணர்ந்ததால்தான் தாய்மடி தேடி வரும் பிள்ளைகளாக, சித்தர்களும், ஞானிகளும், இங்கோடி வருகிறார்கள். இதன் காலடியிலேயே அடங்குகிறார்கள். ஒடுங்குகிறார்கள்.’’‘‘சிறுவயதில், மாமனோடு இங்கு வந்ததாக ஞாபகம், யாருக்கென்று தெரியவில்லை. பிள்ளைப் பேறுக்கு வேண்டிக் கொண்டது பலித்ததால், கரும்புத் தொட்டில் சுமந்து, உறவுகளோடு மலையைச் சுற்றி வந்ததாய் நினைவு.

இவ்வூர் கொஞ்சம் மாறியிருக்கிறது. மலையைச் சுற்றிலும், அங்கொன்றும், இங்கொன்றுமாய் குடியிருப்புகள் கூடியிருக்கிறது. ஆனால், இம்மலை மாறவில்லை. அப்படியேயிருக்கிறது. திண்ணையில் அமர்ந்தபடி, கண்கள் சுருக்கி, மொத்த ஜனங்களையும் கூர்ந்து கவனிக்கிற, மூத்தகிழவியாய், சிறுவயதில் பார்த்தது போல, அப்படியேதானிருக்கிறது. சத்தியமெப்போதும் மாறாது. அப்படியே தானிருக்கும்.’’

‘‘இது வெறும்பாறையும், சரளைக்கற்களும், குகைகளும், புதர்களும், மரமும், செடிகளும், மண்டிக்கிடக்கிற இடமில்லை. காட்டுவிலங்குகள் உலாவுகின்றவனமில்லை. இது புவியிலிறங்கியிருக்கும் கைலாயத்தின் சூட்சுமசக்தி. இம்மலைதான் திண்ணை. அதன்மேல் அமர்ந்திருக்கும் திண்ணைக்கிழவி போல் அந்த சூட்சுமசக்தி. அதுவே இந்தபூமியின் மழைப் பெய்தலை, வெயில் காய்தலை, பனிப்பொழிவை, காற்றின் திசையை, தீர்மானிக்கிறது.

அதுவே அனைத்தையும் கலைத்துப் போட்டு காய் நகர்த்துகிறது. உயரத்தில், வடிவத்தில் ஒப்பிட்டால், இமயத்தின் ஒரு துண்டுதானாயினும், இந்த அருணை, கைலாயத்திற்கு இணை.’’‘‘அப்படி, கைலாயத்திற்கு ஈடான இந்த அருணையின் நாயகனுக்கு கோபுரமெழுப்புகிற பாக்கியம், எனக்கு கிடைத்திருப்பது அது என்மேல் வைத்த கருணை. எம்முன்னோர்கள் எனக்களித்த ஆசிர்வாதம்.’’

‘‘அடிக்கடி என் குருநாதர் சொல்வார்.’’ ‘‘கோபுரமென்பது லேசுபட்டதில்லை. அது யாகத்தீயிலிருந்து எழும்புகிற தீப்பிழம்பின் உருவகம். ‘‘அப்போது கோபுரத்தின் வாயில்?’’ என்று நான் கேள்வி எழுப்பியபோது.’’ ‘‘அது, எரிகிற யாகத்தீ இரண்டாகப் பிளந்து, நடுவே ஏற்படுகிற வழியென்கிற கற்பிதம். அதன் நடுவே உட்புகுந்து, கோயிலுக்குள் செல்வோரின் உடலை, ஒருபாவனைத்தீ தீண்டுகிறது.

அதனால், அகமும், புறமும் தூய்மை அடைகிறது. அந்தத் தூய்மையோடு கருவறையை நெருங்கி, இறைவனைக்காணும் ஆன்மா இறையின்பத்தை அனுபவிக்கிறது. அப்படியான உன்னதமான உருவகக் கோபுரத்தை, எல்லோராலும் எழுப்பிடயியலாது. மன்னரேயானாலுமாகாது. அதுவே ஆசைப் பட்டாலொழிய, இது நடக்காது.’’ என வானம் காட்டிப்
பேசியது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

‘‘இத்தனைக் காலத்தில், இப்போதுதான் அது ஆசைப்பட்டிருக்கிறதுபோல, அதனால்தான் இப்பேர்ப்பட்ட பணி நிகழ்கிறது. அதுதான் என்னைத் தேர்ந்தெடுத்து, இங்கிழுத்து வந்திருக்கிறது.’’
‘‘பூமிபூஜை முடித்து பத்து நாளாயிற்று. எருதுகள் பூட்டப்பட்ட கலப்பைகள் கொண்டு, உழுதாயிற்று. கோமியம் கலந்த விதைகளைத் தெளித்தாயிற்று. மெல்லியப் பச்சையோடு விதைகள் லேசாக முளைத்துவிட்டன. விரைவில் முழுதும் முளைத்து, பச்சைப் பசேலென ஆகும். அதுவே முதல் நற்சகுனம். அப்போது கட்டுமான இடத்தில், கன்றுகளோடு, பசுக்களை மேயவிட வேண்டும். எருதுகளை நிலத்தில் அலையவிட வேண்டும். அவைகளின் காலடிபட்டதும், அவைகளால் முகரப்பட்டதும், இந்நிலம் பவித்திரமாகிவிடும் என்பது ஒரு சாஸ்திரக் கணக்கு.’’

‘‘அதன்பிறகு குதிரைப் பாய்ச்சலில், வேலை நடக்கவேண்டும். நினைக்கவே மலைப் பாயிருக்கிறது. கிழக்குத் திசைப்பக்கம் ஏழு நிலைகளும், மற்ற திசைகளில், ஐந்து நிலைகளும், கோபுரங்களில் திட்டமிடப் பட்டிருக்கிறது. அனைத்து வேலைகளையும் வேகப்படுத்த வேண்டும். இங்கு இடைவிடாது கேட்கப் போகும் உளிச்சத்தமடங்க, குறைந்தபட்சம் பத்து வருடங்களாகும். அதுவரை நான் தாங்குவேனா? தெரியவில்லை. குடந்தை ஜோசியன், ஜாதகத்தைப் பார்த்து, இன்னும் பன்னிரண்டு வருடங்கள் ஆயுட்காலமென சொல்லியிருக்கிறான்.

அதனால் மொத்தப் பணியும் முடியும் வரை இருப்பேனா என்று தெரியவில்லை.’’‘‘ஆனாலும் இது என் பாக்கியம். என் குருநாதர் தந்த ஆசிர்வாதம். அதனால்தான் நானிங்கு நிற்கிறேன். காலம் என் பெயர் சொல்லுமா தெரியவில்லை. ஆனால், காலத்திற்கும் பேர் சொல்லும் படியாக இக்கோபுரப்பணியை செய்ய வேண்டும். அதற்கிந்த அருணை ஈசன் துணை நிற்கவேண்டும்.’’ என்று யோசித்த ரவீந்திர பெருந்தச்சன், நன்கு விடிந்துவிட்ட வெளிச்சத்தில், மிளிர்ந்த மலையைப் பார்த்து வணங்கினார். வணங்கிய கையோடு, பணிகள் குறித்து திட்டமிட்டார்.

உதவியாளர்களையழைத்து, அன்றையப் பணிகளை விவரித்தார். கிழக்கு கோபுர வேலையே பிரதானம் என்றாலும், அனைத்து கோபுரங்களுக்கும் அதிஷ்டான மெழுப்புதலே முதல் திட்டம் அதற்கான பாறைகளைச் செதுக்கும்படி உத்தரவிட்டார். ஆட்களனைவரையும் குழுவாகப் பிரித்து, விரைவாக வேலையை ஆரம்பிக்கும்படி துரத்தினார். ‘‘அண்ணாமலை ஈசா, மார்க்கண்டேயனுக்கு ஆயுள்பலம் நீட்டித்து தந்தவனே. இந்த திருப்பணி முடியும்வரை, இந்த மண்ணில் என்னை எமபயமில்லாது இருக்க வை. எல்லாம் முடிந்ததும், நானாகவே உன்னைத் தேடி, காஞ்சிக்கு வருகிறேன். அதுவரை இங்கிருக்க அருள்செய்’’ என மலையைப் பார்த்து வணங்கினார்.

(தொடரும்)

குமரன் லோகபிரியா

The post ராஜகோபுர மனசு 5 appeared first on Dinakaran.

Read Entire Article