ராசிபுரம் அருகே மளிகை கடையில் குட்கா விற்பதாக பெண்ணை மிரட்டி ₹6 ஆயிரம் பறிப்பு

3 weeks ago 4

*காரில் தப்பிய போலி அதிகாரிக்கு வலை

ராசிபுரம் : ராசிபுரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பதாக கூறி, மளிகை கடையில் இருந்த பெண்ணை மிரட்டி ரூ.6 ஆயிரம் பறித்து சென்ற போலி அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சி பகுதியில், பேபி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை, டிப்டாப் உடை அணிந்து வந்த நபர், தனது பெயர் செந்தில்குமார் எனவும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எனவும் கூறிக் கொண்டு, மளிகை கடைக்குள் புகுந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேபியின் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.

எனவே, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்போவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பேபி கேட்டுக் கொண்டதன் பேரில், அபராதத்தை ரூ.10 ஆயிரமாக குறைக்க ஒப்புக் கொண்ட அந்த நபர், முதல் கட்டமாக ரூ.6 ஆயிரத்தை வாங்கிக் கொண்டார். பின்னர், ஆய்வுக்கு மாதிரி எடுப்பதாக கூறி, கடையில் இருந்த சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து காரில் சென்று விட்டார்.

இதுகுறித்து, பேபி தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக வீட்டுக்கு வந்த அவர், கடையில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா பதிவை கொண்டு, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அருணிடம் கேட்ட போது, செந்தில்குமார் என்ற பெயரில், நாமக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையில் யாரும் பணி புரியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மோசடியில் ஈடுபட்ட போலி நபர் குறித்த வீடியோ, இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என கூறி, கடை உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராசிபுரம் அருகே மளிகை கடையில் குட்கா விற்பதாக பெண்ணை மிரட்டி ₹6 ஆயிரம் பறிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article