4 பேர் விஷம் குடித்து இறந்தது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேரை கைது செய்த போலீசார்

3 hours ago 1

ஈரோடு: 4 பேர் விஷம் குடித்து இறந்தது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே மீன்கிணறு பகுதியை சேர்ந்தவர் தனசேகர், 36. இவரது மனைவி பாலாமணி, 29. இருவரும் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்தனர். இவர்களுக்கு வந்தனா (10) என்ற மகள் மோனீஷ் ( 7) என்ற மகன் இருந்தனர். கடந்த, 15ம் தேதி தன் தாய், தந்தை ஆகியோர் விஷம் சாப்பிட்டு விட்டதாகவும், தனக்கும், தம்பிக்கும், கூல்டிரிங்சில் மாத்திரையை அவர்கள் கலந்து கொடுத்து விட்டதாகவும், தன் பாட்டி பெரியகண்ணாள் (60) என்பவருக்கு பேத்தி வந்தனா போனில் தகவல் தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்த பெரியகண்ணாள், பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சென்று பார்த்தபோது, மகனும், மருமகளும் இறந்தது தெரியவந்தது. இந்நிலையில், சிகிச்சையில் இருந்த, இரு குழந்தைகளும் மறுநாள் இறந்தனர். இது குறித்து, சிறுவலுார் போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், “பெருந்துறை புதுதொட்டிபாளையத்தைச் சேர்ந்த சேது என்கிற கோபி சங்கர் (25), சிறுவலூர் பதிபாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி (52), அதே பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவருடைய மனைவி வெண்ணிலா (38), சண்முகம் என்பவருடைய மனைவி சுமதி (40) ஆகியோர் எங்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் மூலம் கடன் பெற்று தந்தனர்.

இதற்காக அதிக தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு எங்களை ஏமாற்றினர். இதனால் நாங்கள் இதர சுய உதவிக்குழுக்களில் பணம் பெற இயலாதபடி செய்து விட்டனர். எனவே தாங்கள் அதிக வட்டிக்கு தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். மேலும் நிதி நிறுவனத்தில் வட்டிக்கு மேல் வட்டி போட்டு பணம் வசூலித்ததால் நாங்கள் மிகுந்த கடனுக்கு உள்ளானோம். நாங்கள் தற்கொலை செய்து கொள்ள இந்த 4 பேர் தான் காரணம்” என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் நடந்த விசாரணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தற்கொலைக்கு தூண்டியதாக கோபி சங்கர், நாராயணசாமி, வெண்ணிலா, சுமதி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post 4 பேர் விஷம் குடித்து இறந்தது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேரை கைது செய்த போலீசார் appeared first on Dinakaran.

Read Entire Article