ராசிகளின் ராஜ்யங்கள்

1 week ago 6

ராசி மண்டலத்தின் எண்ணற்ற ஆச்சர்யங்களை உள்ளடக்கியது. வான் மண்டலத்தில் பூமிக்கு மேலே உள்ள நட்சத்திர கூட்டங்கள் உள்ள பகுதியை முன்னூற்று அறுபது கலைகளை முப்பது (30°) கலைகளாக கொண்ட பன்னிரெண்டு (12) பிரிவுகளாக கொண்ட பகுதியை ராசி மண்டலம் என பிரித்து அதன் மூலம் வருகின்ற கிரகங்களின் கதிர் வீச்சுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அறிகின்றோம். இதில், இரண்டுவிதமான இயக்கங்கள் நம்மை இயக்குகின்றன. ஒன்று பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் ஒரு இயக்கமும் சூரியனைச் சுற்றி வருவதால் ஒரு இயக்கமும் இருக்கின்றது. இயக்கம்தான் காலம் என்பது ஜோதிடத்தின் கண்.

இந்த பிரபஞ்சத்தில் பலகோடி சூரிய மண்டலங்கள் உள்ளன சமீபத்திய ஆய்வுகள் நமது சூரியமண்டலத்திற்கு மேலே இன்னும் ஏராளமான சூரிய மண்டலங்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றன. ஆனால், நாம் இருக்கும் பூமிக்கு அருகில் சூரிய மண்டலத்திற்கு அருகில் கோள்கள்தான் பூமியில் உள்ள உயிரிகளில் மாற்றத்தை தோற்றுவிக்கின்றன என்பது நிச்சயமான உண்மை.

பூமி தன்னுடைய மேற்கிலிருந்து கிழக்காக சுற்றி வருகிறது. ஆதலால், சூரியன் கிழக்கில் உதயமாகிறது.

அன்றாடம் சூரியன் கதிரானது பயணம் செய்யும் ராசியைதான் நாம் லக்னம் என்று அழைக்கின்றோம். இந்த லக்னமானது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கும். இதனை எவ்வாறு கண்டறியலாம் என்றால், சூரியன் எந்த ராசியில் இருக்கிறதோ அங்குதான் தனது பயணத்தை காலையில் சூரியன் உதயமாகும் காலத்தில் தனது கதிர்களை ராசி மண்டலத்தில் பிரதிபலிக்கச் செய்கிறது. பின்பு ஒவ்வொரு ராசியாக பயணித்து மீண்டும் சூரியன் பயணிக்கும் ராசிக்கு முந்தைய ராசியில் முடிவடைகிறது. இதுவே, ஒரு நாள் ஆகும். இந்த ஒரு நாளில் சூரியன் 1.013 டிகிரி இடப்பெயர்வு அடைகிறது.

நாம் கற்பனையில் கொள்ளும் ராசி மண்டலமானது வட்டமாக வரையறுக்கப்பட்டு, அது நமக்கு சதுர வடிவமாக ராசிகளில் அவை வரையறுக்கப்பட்டிருக்கின்றன. கிரகங்களின் பார்வையையும் இணைவையும் கிரகங்களின் சொந்த ஆட்சி வீடுகளையும் நினைவில் வைத்துக் கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில், நீள்வட்டத்தை சுருக்கமாக ராசி கட்டம் என்று சொல்லப்படுகிறது.

பலரின் சிந்தனைகளில் இதுவும் ஒன்றாகத்தான் உள்ளது. ராசி கட்டத்தில் பூமி எங்கு உள்ளது என்ற கேள்வி நமக்கு வரலாம், கண்டிப்பாக வர வேண்டும். பூமி என்பது ராசி மண்டலத்தின் நடுவில் உள்ள பகுதியாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் ஒரு ஜாதகத்தில் நீங்கள் என்பது பூமியாக உள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சூரிய மண்டலத்தில் கிரகங்கள் அனைத்தும் சூரியன் → புதன் → சுக்ரன் → பூமி (சந்திரன்) → செவ்வாய் → குரு → சனி என வரிசையாக உள்ளன.

இதன் அடிப்படையில், தனியான வட்டப்பாதை (orbit) உள்ள கிரகங்களுக்கு இரண்டு ராசிகளும் தனியான வட்டப்பாதை இல்லாத கிரகங்களுக்கு ஒரு ராசியும் உள்ளது. இதன் பொருள் கிரகங்கள் பார்வை என்ற ஒளி பிரதிபலிப்பையும் தனிப்பட்ட நகர்விற்கான காலத்தையும் குறிக்கிறது.

ராசிகளின் அடிப்படையில் உள்ள சில உட்பொருட்களாவன. ராசிகள் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

சர ராசி என்பது நிலையற்ற தன்மையை கொண்டுள்ளது. பூமி சுழலும் பகுதியில் உள்ள ராசி மண்டலத்தில் இயற்கையின் அமைப்புகள் அனைத்தும் நிலையற்ற தன்மையை கொண்டிருக்கிறது. அதுபோலவே, ஸ்திரம் என்பது ராசி மண்டலத்தில் உள்ள வஸ்துக்கள் யாவும் நிலையான தன்மையை கொண்டுள்ளது. அவ்வாறே, உபயம் என்பது ராசி மண்டலத்தில் உள்ள பொருட்கள் நிலையானதாகவும் நிலையற்றதாகவும் கொண்டுள்ளது.

சரம் என்பதை வளர்ச்சி என்றும், ஸ்திரம் என்பதை வளர்ச்சியில்லாதது என்றும், உபயம் என்பதை வளர்ச்சி /வளர்ச்சி இல்லாதது என்றும் அழைக்கலாம்.

ராசிகளின் அடிப்படையில் பஞ்ச பூதங்களும் உள்ளன. இந்த பஞ்ச பூதங்களும் ராசி மண்டலத்திற்கு உட்படுகின்றன. ஒவ்வொரு ராசி மண்டலமும் ஒவ்வொரு பஞ்சபூத தத்துவத்திற்கு உண்டான ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்பது சிறப்பான அமைப்பாகும்.

நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற நான்கு பூதங்களும் முறையே மேஷ ராசியிலிருந்து முறையே மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகாயம் என்பது எல்லா ராசிகளுக்கும் பொதுவானதாக உள்ளது. ஏனெனில், இந்த ஆகாயத்தில்தான் அனைத்தும் உள்ளன என்பது பொதுவான பூதமாக உள்ளது.

நாம் சரம், ஸ்திரம், உபயம் போன்றவற்றை எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்பதற்கான உதாரணம்.

*தொழில் தொடங்குவது, கொடுத்த பணத்தை வாங்குவது, மரக்கன்றை நடவு செய்வது, புதிதாக முதலீடு செய்வது போன்ற வளர்ச்சிக்கான விஷயங்களை சர லக்னத்தில் செய்தால் மேலும், வளரும்.

*திருமண முகூர்த்தம், சொந்த வீடு கட்டுவது, நிலம் வாங்குவது போன்றவற்றை ஸ்திர லக்னத்தில் செய்வது நிலையான உறுதி தன்மையை நமக்கு கொடுக்கும்.

*நாம் கடன் வாங்கும் பொழுது சர லக்னம் அமையுமாறு வாங்கக்கூடாது. கடனானது வளரும் தன்மை கொண்டதாக இருக்கும். ஆகவே, உபய லக்னத்தில் வாங்குவது சிறப்பானதாகும்.

ஆகவே, மருத்துவமனைக்கு செல்வது, நகை அடகு வைப்பது, ஒருவருக்கு பணம் தருவது போன்றவற்றை உபய லக்னத்தில் செய்ய வேண்டும்.

லக்னம் என்பது சூரியனின் கதிராகவும் ராசி என்பது சந்திரனின் கதிராகவும் உள்ளது என்பதே உண்மை. இவ்வாறு ராசியின் சூட்சுமங்கள் இன்னும் பல்வேறு அமைப்புகளாக பிரிந்துள்ளன என்பதைப் பற்றி ராசிகளின் ராஜ்யங்கள் என்ற தலைப்பில் பிரித்து அறிவோம்.

The post ராசிகளின் ராஜ்யங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article