ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

3 months ago 18

புதுடெல்லி: ராகுல்காந்தி குடியுரிமை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம், இதுதொடர்பான விசாரணையை அக்டோபர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கர்நாடக மாநில பாஜகவை சேர்ந்த எஸ்.விக்னேஷ் என்பவர் மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தியின் குடியுரிமைக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இந்திய குடியுரிமை இல்லாத காரணத்தினால், அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை. மேலும் ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளவர் என்பதற்கான ஆதாரங்கள் இங்கிலாந்து அரசிடம் உள்ளது. இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி உரிய நீதிமன்ற உத்தரவுடன் இங்கிலாந்து அரசிடம் இருந்து ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான தகவல்களை பெற வேண்டும். ராகுல்காந்தி ரேபரேலி மக்களவை உறுப்பினர் என வழங்கப்பட்ட தேர்தல் ஆணையர் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட மனுவானது அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அறிக்கை பெற்று தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஒரு விவகாரம் தொடர்பாக, ஒரே ஒரு நபரின் விவரங்களை பெறுவதற்கு இத்தனை நாட்களா? ஒரு டேட்டாவை உடனடியாக எடுக்க முடியாதா? இதற்காக மேலும் அவகாசம் கேட்பீர்களா?’ என்று ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அறிக்கை பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு மேல் இந்த விவகாரத்தில் எந்தவித கால அவகாச நிவாரணமும் வழங்க மாட்டோம் என்று நீதிபகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

 

The post ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article