திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வரும் 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து வயநாட்டில் இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தியும், இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சத்யன் மொகேரியும் போட்டியிடுகின்றனர்.
பிரியங்கா காந்தி அடுத்த வாரம் முதல் வயநாட்டில் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக 22ம் தேதி அவர் வயநாட்டுக்கு வருகிறார். மறுநாள் (23ம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அன்று முதல் 10 நாட்கள் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவருடன், ராகுல் காந்தியும் வயநாட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி இந்த தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், இந்த ஆண்டு நடந்த தேர்தலில் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.
* பிரியங்காவை எதிர்க்கும் பாஜ வேட்பாளர்
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிடும் பாஜ வேட்பாள வேட்பாளராக குஷ்பு நிறுத்தப்படுவார் என தகவல் பரவியது. இந்த நிலையில் பாஜ சார்பில் கோழிக்கோடு மாநகராட்சி பெண் கவுன்சிலர் நவ்யா ஹரிதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். பிடெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த நவ்யா, இவர் 2 முறை கோழிக்கோடு மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது நவ்யா, பாஜ மகளிரணி மாநில பொதுச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார்.
The post ராகுல் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் வயநாடு தொகுதியில் அக்.23ல் பிரியங்கா வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.