லக்னோ: கும்பமேளாவில் ராகுல், பிரியங்கா கலந்து கொண்டு புனித நீராட உள்ளதாகவும், நேரு குடும்பத்திற்கு கும்பமேளா ஒன்றும் புதிதல்ல என்றும் பாஜகவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் நேற்று வரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்தது. உலகளவில் இதுவரை நடைபெற்ற மத, கலாசார அல்லது சமூக நிகழ்வுகளில் பங்கேற்ற மக்கள்தொகையைவிட இதுவே மிக அதிகமாகும்.
நடப்பு கும்ப மேளாவில் சுமார் 45 கோடி பேர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக மாநில அரசு கணித்திருந்த போதிலும், மகா கும்பமேளா நிறைவடைய பத்து நாட்களுக்கும் மேல் உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது. கும்பமேளா நிகழ்வில் அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி தொழிலபதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். அதேபோல் வெளிநாட்டை சேர்ந்த பயணிகளும் கும்பமேளாவுக்கு சென்று கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அடுத்த வாரம் மகா கும்பமேளாவில் புனித நீராடுவார்.
அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கும்பமேளாவும், பிரயாக்ராஜும் (அலகாபாத்) நேரு குடும்பத்திற்கு புதிதல்ல. அவர்களின் பூர்வீக இடமாகும். அவர்களின் மூதாதையர் வீடுகள் இங்கு அமைந்துள்ளன. ஆனந்த் பவன் மற்றும் ஸ்வராஜ் பவன் இன்னும் உள்ளன. திரிவேணி சங்கமும் அவர்களுக்கு புதிதல்ல. ராகுலுடன் அவரது சகோதரியும் வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தியும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள். தாங்கள் தான் (பாஜக) மகா கும்பமேளாவிற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறி அதிலிருந்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பவர்களுக்கு நேரு குடும்பத்திற்கு கும்பமேளா ஒன்றும் புதிதல்ல’ என்று கூறினார்.
The post ராகுல், பிரியங்கா புனித நீராட ஏற்பாடு; நேரு குடும்பத்திற்கு கும்பமேளா ஒன்றும் புதிதல்ல: பாஜகவுக்கு காங்கிரஸ் தலைவர் பதிலடி appeared first on Dinakaran.