ராகு – கேது இரண்டுக்கும் ஒரு தலம்

4 hours ago 2

‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், பாம்பைக் கண்டால் மற்ற விலங்குகள் பயப்படத்தான் செய்கிறது. இந்தப் பாம்பை எட்டுவகையாக நம் புராணங்கள் பிரிக்கின்றன. அவை:- கார்க்கோடன், அனந்தம், தட்சகன், சங்கபாலன், பதுமன், தட்சன், அருணன் மற்றும் ஆதிசேஷன் ஆகியவை.

இவையனைத்தும் ஒன்றாய்க்கூடி ஒரு தலத்தில் சிவபெருமானை வழிபாடு செய்த பெருமையுடையது “திருப்பாம்புரம்’’. இத்தலம், திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் அருகில் செல்வத்தை அருளும் “திருவீழிமிழலை’’ என்ற தலமும், லலிதா சகஸ்ரநாமம் இயற்றப்பட்ட “திருமீயச்சூரும்’’ உள்ளன. இந்த திருப்பாம்புரம் பல அற்புதங்கள் நிறைந்த ஒப்பற்ற திருத்தலம். இங்குள்ள ஆலமரங்களின் விழுதுகள் நிலத்தில் விழுவதில்லை. அகத்திப்பூ பூப்பதில்லை. பாம்பு முதலிய விஷப்பிராணிகள் யாரையும் தீண்டுவதில்லை. தீண்டினாலும் விஷம் ஏறுவதில்லை.

அதற்குக் காரணமுண்டு. இத்தலத்தில், முன்னொரு காலத்தில் சித்தர்கள் ஆலம் விழுதை, நாராகத்திரித்து அகத்திப்பூவை மாலையாக்கி இறைவனுக்கு அணிவித்து வழிபட்டனராம். அதனால், தாங்கள் செய்ததைப் போல் மனிதர்கள் யாரும் செய்யக் கூடாது என்பதனால், அகத்திப்பூ மொட்டாகத் தோன்றும், ஆனால் விரியாது. ஆலம் விழுது எவ்வளவு வளர்ந்தாலும், நிலத்தைத் தொடாது. எட்டுவகைப் பாம்புகளும் இறைவனை வழிபட்டதால், இங்கு யாரையும் பாம்பு தீண்டுவதில்லை.

இத்தகைய இத்தலம் திருவண்ணாமலை திருத்தலம் தோன்றுவதற்கு முன்பே தோன்றியதாகும், அதற்குச் சான்று இங்கு அண்ணாமலையார். மேலும், இங்கு லிங்கோத்பவர் சந்நதி இல்லை. இவ்வளவு தொன்மையான தலத்தின் கோயில் அமைப்பானது மாடக்கோயிலாக உள்ளது. ஒரு கோயிலின் மேல் அடுக்காக இன்னொரு கோயில் கட்டப்பட்டால் அதுதான் மாடக்கோயில். அவ்வகையில் இது மாடக்கோயில் வகையைச் சார்ந்தது.

மேலும், இத்தலம் ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. அதற்குக் காரணம், இங்கு ராகுவும் – கேதுவும் ஒரே விக்ரகமாக இருந்து சிவபெருமானை வழிபாடு செய்கின்றனர். அதனால் இது ராகு கேது பரிகாரத்தலமாகி விளங்கு கிறது. இத்தலம் ‘தென்காளஹஸ்தி’ என்று அழைக்கப்படுகிறது.

ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம், 18 வருட ராகு திசை நடப்பு, 7 வருட கேது திசை நடப்பு, லக்னத்திற்கு இரண்டில் ராகுவோ, கேதுவோ இருத்தல், லக்னத்திற்கு எட்டில் கேதுவோ, ராகுவோ இருத்தல், ராகு கேது புத்தி நடத்தல், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணத்தடை, கனவில் பாம்பு வருதல், தெரிந்தோ தெரியாமலோ பாம்பை அடித்தல், கடன் தொல்லை இவை அனைத்திற்கும் இங்கு பரிகார வழிபாடு செய்யப்படுகிறது.

கடந்த 26.4.2025 சித்திரை மாதம் 13-ம் தேதி, சனிக்கிழமையன்று இங்கு ராகு – கேது பெயர்ச்சி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை சரியாக 4.20 மணிக்கு நடைபெற்ற இந்தப் பெயர்ச்சி விழாவில், சிறப்பு யாகம், அபிஷேகம் ஆகிய வழிபாடுகள் நடைபெற்றன.அமைவிடம் – திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சுரைக்காயூர் அஞ்சல், திருப்பாம்புரம்.

சிவ.சதீஸ்குமார்

The post ராகு – கேது இரண்டுக்கும் ஒரு தலம் appeared first on Dinakaran.

Read Entire Article