புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 85 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 20 இந்தியர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். டெல்லியில் ஒன்றிய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அளித்த பேட்டியில், ‘ரஷ்ய ராணுவத்தில் சட்டவிரோதமாகவோ அல்லது வேறுவிதமாகவோ பணிபுரியும் இந்தியர்களை விடுவிப்பிதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரத்தில், ரஷ்யாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களிடம் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
தற்போதைய தகவல்களின்படி, சுமார் 85 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தின் பிடியில் இருந்து இந்தியா திரும்பி வந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, உக்ரைன் – ரஷ்ய போர் மோதலில் சில இந்தியர்கள் இறந்துள்ளனர். அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். இன்னும் 20 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள அனைத்து இந்தியர்களையும் ரஷ்ய ராணுவத்திடம் இருந்து அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது’ என்று கூறினார். முன்னதாக கிடைத்த தகவலின்படி, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ள 20 இந்தியர்களை விடுவிக்கும் முயற்சி தீவிரம்: ஒன்றிய வெளியுறவுச் செயலர் தகவல் appeared first on Dinakaran.