புதுச்சேரி, ஜன. 24: புதுச்சேரியில் ரவுடியை கொல்ல நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் பதுங்கியிருந்த ரவுடி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குபேர் நகரில் உள்ள லோகமுத்து மாரியம்மன் கோயில் பின்பக்கத்தில் மர்ம நபர்கள் பயங்கர ஆயதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்ெபக்டர் பிரபு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரித்ததில்,
பிரியதர்ஷினி நகரை சேர்ந்த மணிகண்டன் (எ) ஸ்டிக்கர் மணி (24), ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த ராஜா (21), அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த ஜேம்ஸ் (22) என்பதும், கடந்த 19ம் தேதி கோவிந்த சாலையில் கண்டக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த லோகு பிரகாஷ், தனது கூட்டாளிகளுடன் மணியை தீர்த்துக்கட்ட நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்துக்கு பழிதீர்க்க பதுங்கி இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டன் (எ) ஸ்டிக்கர் மணி (24), ராஜா (21) அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த ஜேம்ஸ் (22) ஆகியோர் மீது வழக்குபதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டு, கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
The post ரவுடியை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் பதுங்கியிருந்த 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.