
திருச்சி,
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திடவும், 5-ம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயமாக்கிடவும், ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்தும் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
திமுக மேடைகளில் எல்லாம் ஆபாச பேச்சுதான் இருக்கும். அதற்கு கைத்தட்ட 100 பேர் இருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு, 2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்கிற மாய உலகத்தில் திமுகவினர் உள்ளார்கள்.வட இந்தியர்கள் யாரும் தமிழர்களை பற்றி இழிவாக பேசியதில்லை. ஆனால் திமுகவினர் வடமாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாநில முதல்-மந்திரிகளையும் இழிவாக பேசுகிறார்கள். இதற்கு அவர்களது பயம்தான் காரணம்.
சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவில் 2 கல்வி கொள்கைகள் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் இரண்டு கல்வி கொள்கையிலும், கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று இருந்தது. அதை மோடி மாற்றி ஏதாவது ஒரு மொழி படிக்க வேண்டும் என கொண்டு வந்தார். தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது. இந்த இயக்கத்தை தொடங்கி 18 நாட்களில் இதுவரை 26 லட்சம் பேர் கையெழுத்து போட்டுள்ளார்கள். இதே வேகத்தில் சென்றால் நமது இலக்கான ஒரு கோடி கையெழுத்து என்பதை தாண்டி, 2 கோடி கையெழுத்தை நோக்கி சென்றுவிடும்.
கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு இந்த பணியை தாண்டி கொஞ்சம் நேரம் இருந்தால் கல்வியை பற்றி பேசுவார். அமைச்சர்கள் காந்தி, செந்தில் பாலாஜி, சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் தமிழகத்தின் கல்வி கொள்கை குறித்து பேசுகிறார்கள். நம் குழந்தைகள் என்ன கல்வி படிக்க வேண்டும் என்பதை இவர்கள் முடிவு செய்வார்களாம். இதை ஏற்க முடியுமா?.
சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை பற்றி பேசிக்கொண்டிருகின்றனர். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு; இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?. திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை; கூட்டுக் களவாணிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய போறாங்களாம். கர்மவீரர் காமராஜர், எம்.ஜி.ஆர். போன்றோர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.