ரவிக்கை நம் இரண்டாவது ஸ்கின்

1 week ago 3

நன்றி குங்குமம் தோழி

– ஸ்வரூபா

தோல் ஒரு லேயர் போல் நம் உடலில் எப்படி ஒட்டியிருக்கிறதோ அப்படியாக நாம் அணிகிற ரவிக்கை இருக்க வேண்டும். இதை அடிப்படையாக வைத்தே என் தொழிலைக் கொண்டு செல்கிறேன். Ravikkai is your second skin என்பதே எனது தாரக மந்திரம் எனப் பேச ஆரம்பித்த ஸ்வரூபா முத்துசிவன், கோவையில் சொந்தமாக பொட்டிக் ஒன்றை நடத்தி வரும் தொழிலதிபராய் மிளிர்வதுடன், ஃபேஷன் டிசைனிங் கல்லூரிகளில் ஃப்ரீலேன்ஸ் கெஸ்ட் லெக்ஷராகவும் வலம் வருகிறார்.

‘‘நான் படித்தது என்னவோ பயோ கெமிஸ்ட்ரி. 18 வயதில் திருமணம். படிப்பை பாதியில் நிறுத்தி, பிறகு அஞ்சல் வழியில் தொடர்ந்தேன். குழந்தை பிறந்து, மகனுக்கு 2 வயது இருக்கும் போது, 2004ல் இந்தப் பொட்டிக்கை ‘தாமரை’ என்கிற பெயரில் தொடங்கினேன். நல்ல உடை உடுத்தினால் எனக்கு எப்படி தன்னம்பிக்கை வருகிறதோ அது மாதிரி, தன்னம்பிக்கை தருகிற ஃபிட்டான உடைகளை பெண்களுக்குத் தயாரித்து தரலாம் என முடிவு செய்து தொடங்கிய ஓட்டம் இது.

டெக்ஸ்டைல் மீதிருந்த ஆர்வத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஒருசில வட மாநிலங்களுக்குப் பயணித்து, அங்குள்ள நெசவாளர்களைச் சந்தித்ததில், அவர்களின் நெசவு , டெக்ஸ்டைல் ஆர்ட் இவற்றை அறிந்து கொண்டதுடன், நேச்சுரல் டை தயாரிப்பு குறித்தும், அதற்கான மரம், செடி, கொடி, பட்டை என எல்லாவற்றையும் என் தோட்டத்திலே
வளர்த்து, நேச்சுரல் டையிங் வொர்க் ஷாப்களையும் மாணவர்களுக்கு நடத்த ஆரம்பித்தேன்.

உலகம் முழுவதும் பெண்கள் சேலை உடுத்துவதை கொண்டு செல்லும் நோக்கத்தில் குட் ஃபிட்டிங் பிளவுஸ் தயாரிப்பிலும் அடுத்து இறங்கினேன். அணிந்திருந்த ப்ளவுஸ் டிசைனை வைத்தே, “ஸ்வரூபாதானே உங்க டிசைனர்” எனப் பேசி நட்பாகினர் என் வாடிக்கையாளர்கள் இருவர்’’ எனத் தன் உழைப்புக்கு சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியை பகிர்ந்து புன்னகைத்தவர், ‘‘நான் தைப்பது பெரும்பாலும் மல்டி பைப்பிங் ப்ளவுஸ் ஸ்டிச்சிங். ஒரே ப்ளவுஸில் 13 பைப்பிங், 16 பைப்பிங் என, சேலையில் வருகிற கலர்களில் பொடி பைப்பிங் கொடுப்போம். என் ரவிக்கையின் ஸ்டைலே பொடி பைப்பிங்தான்’’ என விரல் உயர்த்துகிறார்.

‘‘பேஸிக்கலி ஐ ஆம் நேச்சர் லவ்வர். ஒன்னு செடி வாங்குவேன். இல்லை பெயின்ட் பிரஷ் வாங்குவேன். பெயின்டிங், பாட்ரின்னு புதுசு புதுசா கிரியேட்டிவாக எதையாவது செய்வதிலும் கற்பதிலும் எனக்கு ஆர்வமும் இருந்தது. 9ம் வகுப்பு படிக்கும் போதே என் அம்மாவுக்கு பிடித்த மாதிரி கச்சிதமாக ப்ளவுஸ் தைத்துக் கொடுத்தேன். +1 படிக்கும் போது நானே கடைக்குச் சென்று, துணிகளைத் தேர்வு செய்து வாங்கி, லேயர் கட் ஸ்கெட் தைத்து அணிய, அது என் அக்காவின் கல்லூரி தோழிகளைக் கவர்ந்தது. கல்லூரியில் நான் படித்த போது என் சுடிதார், துப்பட்டா, ப்ளவுஸ் இவற்றிற்கு நானே பெயின்டிங் செய்து, அணிந்து செல்வேன்.

இதைப் பார்க்கும் தோழிகள், ‘நல்லா இருக்கே, எங்க வாங்குன?’ எனக் கேட்க ஆரம்பித்தனர்.காதி மற்றும் கதர் துணிகள் மேல் எனக்கு எப்போதுமே அலாதி ஈர்ப்பு இருந்தது. எங்கேயுமே கிடைக்காத ஒன்றை வித்தியாசமாகச் செய்வது எனக்குப் பிடித்திருந்தது. காதி துணியில் நானே பெயின்டிங் செய்து, விதவிதமான பட்டன்களை வைத்து தைக்க, பார்க்க உடை ரிச்சாக மாறும். ‘எங்களுக்கும் இது மாதிரி வேண்டும்… செய்து கொடு’வென தோழிகள் கேட்க, என் தொழில் அப்போதே தொடங்கிருச்சு’’ எனப் புன்னகைத்த ஸ்வரூபா, ஃபேஷன் உலகிற்குள் நுழைந்த குழந்தைப் பருவத்தையும் அசை போட்டார்.

‘‘நான் 5ம் வகுப்பு படிக்கும் போது, என் அம்மா தையல் கற்க ஆரம்பித்தார். என் விடுமுறை நாட்களில் நானும் அம்மாவோடு என் பொம்மையுடன் செல்வேன். தையல் படிக்க வரும் பெண்கள் வெட்டிப்போடுகிற, வண்ண வண்ண துணிகளின் துண்டுகளைப் பார்த்ததுமே பரவசம் பற்றிக்கொள்ளும். கலர் துண்டுகளை சேகரித்து, கையில் வைத்து பொம்மையுடன் விளையாடுவேன். வண்ணம் மற்றும் டெக்ஷர்ஸ் மீது எனக்கு காதல் பிறந்தது இப்படித்தான்’’ என்றவர், ‘‘தையல் ஆசிரியர் சொல்வதைக் காதில் வாங்கியபடியே நான் விளையாட, “ஒரு நல்ல டெய்லர், கோடு போட்ட மாதிரி, நேர்கோட்டில் தைக்கணும்” எனச் சொன்னதும் காதில் விழுந்தது. அம்மாவின் மெஷினில் பேப்பர் வைத்து ஓட்டி, எனக்கு நேராக தையல் வருகிறதா எனப் பார்க்க ஆரம்பித்தேன்.

கலர் துண்டுகளை வைத்து, என் கைகளால் பொம்மைக்கு கச்சிதமாக உடை தைத்து அணிய, தையல் ஆசிரியரிடமிருந்து பாராட்டு கிடைத்தது. இப்படித்தான் ஃபேஷன் உலகம் என்னை இருகரம் நீட்டி ஸ்வீகரித்தது’’ எனத் தான் ஏகலைவனாய் மாறி, ஃபேஷன் உலகிற்குள் நுழைந்த முன்கதை சுருக்கத்தை முடித்தவர் மேலும் தொடர்ந்தார்.‘‘எனது தாமரை டிசைன் ஸ்டுடியோவின் ஓர் அங்கமாய் ‘ரவிக்கை’யை கொண்டு வந்ததுடன், இன்றைய நவீன பெண்கள் அணியும் உடைகளில், நேச்சுரல் கலர்களை இயற்கை முறையில் தயாரித்து அதில் ப்ளாக் செய்வது, டிசைன்களிலும் புதுமை புகுத்துவதென ஃபேஷன் உலகைக் கலக்கி வருகிறேன்.

எனது தயாரிப்பில் உருவான டிசைன் நாளிதழ் ஒன்றிலும் வெளியானது. என் தயாரிப்பு ரவிக்கைகளுக்கு, என் வாடிக்கையாளர்களையே மாடலாக்கி, ‘ரவிக்கை’ என்கிற பெயரிலே ஆன்லைன் விற்பனை இணையதளம் ஒன்றையும் நடத்தி வருகிறேன்’’ என்றவர், ‘ரவிக்கை’ வளர்ந்த கதையை மேலும் விவரித்தார்.

‘‘ஆரம்பித்த சிறிது நாட்களிலே என் புகழ் சுற்றுவட்டாரத்தில் பரவத் தொடங்க, வாடிக்கையாளர்கள் வேர்ட் டூ மவுத் மூலமாக அதிகரித்தனர். பல்வேறு உடல் அமைப்புகளையும் பார்த்து பார்த்து அளவெடுத்ததில், ஒருவரை பார்த்ததுமே, அவருடைய ஷோல்டர், அப்பர் செஸ்ட், வெய்ஸ்ட், ஸிலீவ் லென்ங்த் அளவுகளை டேப் இன்றி கணிக்கப் பழகினேன். எந்தெந்த உடல் அமைப்புக்கு எது செட்டாகும் என்பது பார்த்ததுமே புரியத் தொடங்கியது. நான் சொல்வதை வாடிக்கையாளர்களும் அப்படியே ஏற்றனர்.

கோவை நகரில் பெரும் நிறுவனங்களில் உயர் பதவிகளை அலங்கரிக்கும் பெண்கள், நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருக்கிற பெண்கள் எனப் பலரும் ரெகுலர் வாடிக்கையாளர்களாக மாற, இன்று என் கார்மென்ட் யூனிட்டில் 15 பேர் வேலை செய்கிறார்கள்.கொரோனா காலத்தில் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி, என்னிடம் இருந்த பல்வேறு அளவுகளை வைத்து, ஸ்டென்ஷில் மற்றும் சைஸ்களை உருவாக்கி டிரையல் பிளவுஸ்களை தயாரித்ததில், அவற்றை டிரையல் செய்து பார்த்த பெண்கள் ஃபெர்பெக்டா கச்சிதமாக இருக்கெனச் சொன்னதுடன், டிரையல் ப்ளவுஸ் அளவுக்கே 25 ப்ளவுஸ், 50 ப்ளவுஸ் என மொத்தமாக தைக்கக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

எல்லா வயதிலும், எல்லா அளவுகளிலும் இருப்பவர்கள், தங்களின் ஃபிட்டான உடையில் எவ்வளவு அழகாக, தன்னம்பிக்கையோடு மிளிர்கிறார்கள் என்பதை வெளி உலகுக்கு காட்ட நினைத்து, 5 வயது முதல் 65 வயது வரை உள்ள எனது வாடிக்கையாளர்களை கொண்டே, ரவிக்கைக்கு ‘துண்ணல்’ என்ற பெயரில் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றையும் கோவையில் நடத்தினேன். இதில் ஐ.ஏ.எஸ் அதிகாரி, வங்கி உயர் அதிகாரி, மிகப்பெரிய தொழிலதிபர்களென எனது வாடிக்கையாளர்கள், தானாக முன்வந்து மாடலிங் செய்து கொடுத்தனர்.

பெண்கள் பாவாடை, சட்டை, தாவணி, ரவிக்கை என அந்தந்த வயதுக்கு போட வேண்டிய உடைகளை எப்போதும் மிஸ் பண்ணவே கூடாது’’ எனத் தன் அனுபவத்தை முன்வைத்த ஸ்வரூபா, ‘‘தாவணி போட வேண்டிய வயதில் அதைப் போடும் போதுதானே, அந்த உடைக்கே உரிய மரியாதையும், அழகும் மிளிரும்’’ என்கிறார்.‘‘அதேபோல், சேலை கட்டுவதை நான் ஒரு ஆர்ட்டாகவே நினைப்பேன். எந்தப் பெண்ணாக இருந்தாலும் சேலையில் கூடுதல் அழகோடு மிளிரத்தான் செய்வார்கள்.

சேலைக்கென ஒரு அழகு எப்போதுமே இருக்கிறது’’ எனச் சிலாகித்தவர், ‘‘எப்படா ரவிக்கைய கழட்டி வீசுவோம் என்கிற எண்ணம் பெண்களுக்கு வராமல், ஒரு டீ-ஷர்ட அணிந்தால் வசதியாய் உணர்வது போல, குட் ஃபிட்டிங் பிளவுஸ் அணிந்து சேலை உடுத்துவதே எப்போதும் அழகு’’ என்றவாறு, ரவிக்கை குறித்து பல்வேறு தகவல்களைத் தந்தவாறே விடைபெற்றார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

 

The post ரவிக்கை நம் இரண்டாவது ஸ்கின் appeared first on Dinakaran.

Read Entire Article