ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்கு தடை : ஐகோர்ட் உத்தரவு

7 hours ago 2

சென்னை : பொதுவெளியில் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகர் ரவி மோகன். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது அவர்கள் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.ஆர்த்தி தரப்பில், மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக நடிகர் ரவி வழங்க வேண்டும் எனக் கோரி புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களுக்கு நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஆர்த்திக்கு தடை விதிக்க வேண்டும் என ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் இருதரப்பும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர்.மேலும் இருவர் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இரு தரப்பினரும் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஏற்கனவே பொதுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை நீக்க வேண்டுமென இருதரப்பினருக்கும் அறிவுறுத்திய நீதிபதி, நடிகர் ரவி மோகன் ஆர்த்தி தம்பதியர் குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

The post ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்கு தடை : ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article