ரயில்வே திட்டம் ரத்து விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்த ஒன்றிய அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 hours ago 2

‘‘வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 10 தோல்வி இலைக்கட்சிக்காரருக்கு 11வது தோல்வியும் உறுதி’’ என்று ‘விசில்’ போட்டாராமே குக்கர்காரர் என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுதான் இருப்பதால் திடீரென அல்வா மாவட்டத்திற்கு விசிட் அடித்தாராம் குக்கர்காரர். தென் மாவட்டங்களுக்கு அவர் விசிட் அடித்தாலே, கரை வேட்டிகள் பரபரக்கும்.. குறிப்பாக அல்வா மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் அதிகம். அந்த உற்சாகத்தில் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்த குக்கர்காரர் பின்னர் நிருபர்களின் கேள்விக்கும் சளைக்காமல் பதிலளித்தார். அவரது பேட்டியில், இலை கட்சியின் சேலம்காரர்பற்றி தான் அதிகம் பேசினார். சேலம் காரருக்கு கட்சி முக்கியமில்லை பணமும், பதவியும் தான் முக்கியம் என்றவர், 10 தேர்தல்களில் தோற்ற சேலம்காரர் வருகிற சட்டமன்ற தேர்தலில் 11வதாகவும் தோற்பது உறுதி என்றார். ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூட ஆள் இல்லாமல் சென்னையில் இருந்தவரை அல்வா தொகுதி வேட்பாளராக அறிவித்தோம்.. அந்த அளவுக்கு ஆள் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் கட்சியினர் எதிர்ப்பால் மாற்றினோம்.. எனினும் ஒரு இடம் கூட மிஞ்சவில்லை. குக்கர்காரர் வேறு 11வது தோல்வியும் உறுதி என ஆரூடம் சொல்கிறாரே.. கூட்டணி எதுவும் இல்லாது போனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆள் கிடைக்குமா? என இலை கட்சியினரின் முகத்தில் கவலை ரேகை தென்படுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பொங்கலன்று மாஜி அமைச்சர் வைத்தியானவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாங்களாமே இலை கட்சி நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தேனிக்காரர் அணியில் நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் வைத்தியானவர் தேனிக்காரருக்கு விசுவாசியாக இருந்து வருகிறார். பொங்கலன்று தனது அணியில் உள்ள நெற்களஞ்சியம் மட்டுமல்லாமல் டெல்டா மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தனித்தனியாக வைத்தியானவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்களாம்…இலை கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் கூட அவரை ரகசியமாக சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்ததோடு அரசியல் பற்றி சிறிது நேரம் ஆலோசனை நடத்தி சென்றாங்களாம்.. இதனால் வைத்தியானவர் மகிழ்ச்சியில் இருந்து வருகிறாராம்.. இலை கட்சி நிர்வாகிகள் பொங்கலன்று சந்தித்ததை தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து நெருங்கிய ஆதரவாளர்களிடம் யோசனை கேட்டு வர்றாராம்.. இந்த டாப்பிக் தான் நெற்களஞ்சிய மாவட்டத்தில் அரசல்புரசலாக பேசப்பட்டு வருது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மீண்டும் அதிகாரத்துக்கு வர மாஜி பதிவாளர் ஒருத்தர் துடிதுடித்துக்கிட்டு இருக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி பொறியியல் கல்லூரி, தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு மைக் நடிகர் பெயரை கொண்டவரை துணைவேந்தராகவும், பேராசிரியராக பணியாற்றிய சிவன் பெயரை கொண்டவரை பதிவாளராகவும் அரசு நியமித்தது. அதிகார பதவிக்கு வந்த நாள் முதல் துணைவேந்தருக்கும், பதிவாளருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இருவரும் ஒருவரை ஒருவரை எப்படி கவிழ்க்கலாம் என்று பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தினாங்க.. பதிவாளரின் முறைகேடுகளை சுட்டிக்காட்டி, அவரை துணைவேந்தர் பணி நீக்கம் செய்தார். உடனே பதிவாளர், தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி ஒரே நாளில், அந்த பணி நீக்க உத்தரவை ரத்து செய்தார். அதேபோல், விதிகளுக்கு மாறாக துணைவேந்தர் நியமிக்கப்பட்டதாக கூறி பதிவாளர் தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சாதகமான தீர்ப்பை பெற்றார். உடனே துணைவேந்தரும் நீதிமன்றத்தை அணுகி, தீர்ப்புக்கு தடை பெற்றார். ஆனால், கடைசி வரை யாருடைய முயற்சிக்கும் எதிர்பார்த்த பலன் கிடைக்கல.. இந்நிலையில் பதிவாளரின் பதவிக்காலம் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்ததால் அவர் மீண்டும் பேராசிரியர் பணிக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.. இதையடுத்து அவர் மீண்டும் புதிய பதவியை பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.. அதே சமயம், அவர் பதவிக்கு வராமல் இருக்க துணைவேந்தரும் தீயாக வேலை செய்து வருகிறார். எவ்வளவோ போராடியும் மாஜி பதிவாளரால் மீண்டும் உயர் பதவிக்கு வர முடியவில்லை. இதனால் நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு சட்டசபையில், கொக்கு போல் அதிகாரமிக்க பதவியை பெற காத்து கிடக்கிறார்.. தற்போது புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு அசம்பாவித சம்பவம் துணைவேந்தருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. இந்த சந்தர்ப்பத்தை மாஜி பதிவாளர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அமைச்சரை அணுகி மீண்டும் பதவிக்கு வரும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரயில்வே திட்டம் ரத்து விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் திடீரென அந்தர்பல்டி அடித்துள்ளாரே…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சென்னை வந்த ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அருப்புக்கோட்டை வழியாக மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டம் கைவிடப்பட்டது என தடாலடியாக கூறி விட்டார். அதற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியதுதான் காரணம் என பழியும் போட்டார்.. வளர்ச்சிப் பணியிலும், திட்டங்களை நிறைவேற்றுவதிலும் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு அரசை ஏதாவது குறை கூற வேண்டும் என்பதற்காக ஒன்றிய அமைச்சர் கூறிய தகவலால் பொதுமக்களும் குழப்பமடைந்தனர். இந்த தகவல் வெளியான உடனேயே உள்ளூர் பெண் அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்டோர் ஒன்றிய அரசுக்கு உடனடி ரியாக்சன் காட்டினர். ஒன்றிய ரயில்வே அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அப்படி எந்த கடிதமும் தமிழக அரசு எழுதவில்லை என புள்ளி விவரத்துடன் குறிப்பிட்டனர். உடனே ஒன்றிய அமைச்சர் சுவரில் அடித்த பந்துபோல தனது கருத்தை வாபஸ் பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பங்கீட்டை திரும்ப வழங்குவதில் வஞ்சனை, கனமழை, புயல் பாதிப்புக்கு ஒரு பைசா கூட தராமல் இழுத்தடிப்பு என ஒன்றிய அரசின் மாற்றந்தாய் மனப்பான்மையில் ரயில்வே திட்டமும் சேர்ந்து விட்டது என பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் காரணமாக தான் கூறியது தனுஷ்கோடி திட்டம் என ஒன்றிய அமைச்சர் சமாளித்துள்ளார். இதற்கு மலையான தேசிய கட்சியின் தலைவர் என்ன சொல்லப் போகிறார், சாட்டையால் தன்னை அடித்துக் கொள்ளப்போகிறாரா என்கின்றனர் முத்துநகர் மக்கள்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post ரயில்வே திட்டம் ரத்து விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்த ஒன்றிய அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article