ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

3 months ago 22
கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? மனித தவறு காரணமா? அல்லது தொழில்நுட்பக்கோளாறு காரணமா? என உயர்மட்ட குழு விசாரணை மேற்கொண்டுவருகிறது.  திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்பக்கத்தில் சுமார் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று மோதி விபத்தை ஏற்படுத்திய மைசூரு-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இதுதான்... 1360 பேர் பயணித்த இந்த ரயில், வழக்கமாக செல்லும் பிரதான பாதையில் செல்லாமல், ரயில் லூப் லைன் எனப்படும் பக்கவாட்டு பாதையில் சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் எதுவும் நிகழ்வில்லை. அதற்கு முக்கிய காரணம், ரயிலின் வேகத்தை ஓட்டுநர் குறைத்ததும், ரயில் மித வேகத்தில் சென்ற நிலையில், தடம்புரண்ட பெட்டிகள் அனைத்தும் ஏசி கோச்சுகள் என்பதால் பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பொன்னேரியிலிருந்து புறப்பட்ட ரயில், கவரப்பேட்டை ரயில் நிலையத்திற்கு 500 மீட்டர் தொலைவிற்கு முன்னர் திடீரென பாதை மாறியது எப்படி என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தலைமையிலான உயர்மட்டக் குழு விசாரணை நடத்திவருகிறது. சரக்கு ரயில் நின்ற தண்டவாளமும், பயணிகள் விரைவு ரயில் செல்ல வேண்டிய தண்டவாளமும் பிரியும் இடத்தில் ஸ்விச் ஓவர் பாக்ஸ் பகுதியில் போல்ட் நட்டு உள்ளிட்டவை கழன்று கிடந்ததால் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அவை விபத்திற்கு முன்பு கழற்றப்பட்டதா? விபத்து நடந்த பின்பு கழன்று விழுந்ததா என்பதை அறிய மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, பாகங்களை மோப்பம் பிடித்த நாய் அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தண்டவாளத்திற்கு எதிர் திசையில் இருந்த விவசாய நிலம் நோக்கி ஓடியது, பின்னர் மற்றொரு தண்டவாளத்தின் எதிர் திசையில் ஓடிப் மீண்டும் அதே இடத்திற்கு திரும்பியது. இந்த நிலையில், ரயில் விபத்து நாச வேலையாகவோ திட்டமிடப்பட்ட விபத்தாகவோ இருக்க வாய்ப்பில்லை என மூத்த ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். சந்தேகத்திற்குரிய இடத்தில் ஏற்கனவே போல்ட், நட்டுகள் கழட்டப்பட்டிருந்தால் மைசூர்-தர்பங்கா ரயிலுக்கு பச்சை சிக்னல் கிடைத்திருக்காது என்றும், கோளாறால் வழித்தடம் மாற்றப்பட்டிருந்தால் தொழில்நுட்பத்தின் படி சிவப்பு விளக்கு தான் எரிந்திருக்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தாலும், கைப்பற்றப்பட்ட போல்ட், நட்டுகள் தடயவியல் துறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ரயில் நிலையத்தை ஒட்டிய பாதையில், இரண்டு தண்டவாளங்கள் பிரியும்போது எந்த வழித்தடத்தில் குறிப்பிட்ட ரயில் செல்ல வேண்டும் என்பதை கவரப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி முடிவு செய்து, எதேனும் மாற்றங்களை செய்தாரா? என்ற கோணத்திலும் ரயில்வே துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  பிரதான பாதையில் செல்லும் அதே வேகத்தில் லூப் லைனில் சென்ற ரயில், சரக்கு ரயில் மீது மோதிய விபத்து சில நொடிகளில் அரங்கேறியதாக கூறப்படுகிறது. பாயிட் மெசின் என அழைக்கப்படும் பாதை மாற்றும் கருவி விபத்துக்கு முன்பே பழுதடைந்திருக்கலாம் என்றும், அதனால், ரயில் லூப் லைன் பாதைக்கு மாறியிருக்கலாம் என்றும் ஓய்வு பெற்ற ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரதான பாதையில் வழக்கத்திற்கு மாறாக அதிர்வு உணரப்பட்டதாகவும், அதனால், தானியங்கி முறையில் பாதை மாறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மனித தவறு காரணமில்லை என்றும் மெக்கானிக்கல் கோளாறே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால், விபத்து நிகழும் சில நிமிடங்களுக்கு முன்னர் சூலூர்பேட்டையை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஓட்டுநர் சிக்னல் கோளாறு இருப்பதாகவோ அல்லது பிரதான பாதையில் அதிர்வை உணர்ந்ததாகவோ கூறவில்லை என ரயில்வே துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், 296 பேர் பலியான ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தை போலவே கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்துள்ளதாகவும், அந்த விபத்துடன் ஒப்பிட்டும், நாசவேலை காரணமா எனவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் விசாரணை நடத்தினர்.
Read Entire Article