சென்னை: ரயில் விபத்து நடத்த கவரைப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கியதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து பீஹார் மாநிலம் தர்பாங்கா செல்லும் பாக்மதி அதிவிரைவு பயணிகள் ரயில் மோதியது. இதில், ரயிலின் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டன. ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. ரயிலில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்தனர்.