புதுடெல்லி: அகமதாபாத் அருகே கடந்த மாதம் 24ம் தேதி புல்லட் ரயில் திட்ட தளத்தில் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் பாலம் கட்டும் கிரேன் எதிர்பாராதவிதமாக அதன் நிலையில் இருந்து சரிந்து அருகில் இருந்த ரயில் பாதையில் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழப்புக்களோ அல்லது கட்டமைப்பில் எந்த சேதமோ ஏற்டவில்லை. ஆனால் அருகில் உள்ள ரயில் பாதை மட்டும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ரயில்வே தளத்திற்கு அருகே நடக்கும் அனைத்து சாலை மேம்பால பணிகளையும் தணிக்கை செய்யும்படி ரயில்வே வாரியம் அதன் மண்டலங்களை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அனுப்பியுள்ள அறிக்கையில்,‘‘சமீபத்தில் மேற்கு ரயில்வேயில் ஒரு அசாதாரண சம்பவம் நடந்தது. ரயில்வே வாரியம் இதனை தீவிரமானதாக எடுத்துக்கொள்கிறது. தயவு செய்து தொடக்க திட்டம், கிரேன்களின் சரியான திறன், நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கிரேன்களின் தன்மை ஒவ்வொரு சாலை மேம்பால தளத்திலும் சரியான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவான தணிக்கை மேற்கொள்ள வேண்டும். அடுத்த பத்து நாட்களில் சாலை மேம்பால கட்டுமான பணிகள் ஏதேனும் தொடங்கப்படவுள்ளதா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் \” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
The post ரயில் பாதைக்கு அருகே நடக்கும் மேம்பால பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்: ரயில்வே வாரியம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.