ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து கால ஒத்திகை பயிற்சி

1 month ago 6

கோவை: பேரிடர் காலங்களில் நடக்கும் விபத்துகளை சமாளிக்க மருத்துவ பணியாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்ய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் ஒத்திகை பயிற்சிகளை நடத்துகிறது. இப் பயிற்சியானது அவசரகால சூழ்நிலையில் முதல் ஒரு மணி நேரத்திற்குள் உயிர்களை காப்பாற்றும் “கோல்டன் ஹவர்’’ என்ற கருத்தை எடுத்துரைக்கிறது. அதன்படி, கோவை ரயில் நிலையத்தில் “பேரிடர் கால ஒத்திகை பயிற்சி’’ தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம், கோவை ரயில் நிலையத்துடன் இணைந்து  ராமகிருஷ்ணா கல்லூரி நேற்று நடத்தியது. இந்த ஒத்திகை பயிற்சியில், ரயில் விபத்தில் 28 பயணிகள் மற்றும் இரண்டு ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்தது போல் சித்தரிக்கப்பட்டது.

அதன்படி, பேரிடர் கால அவசர நிலை குறித்து கோவை ரயில் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைப்பு வந்தவுடன் “மஞ்சள் குறியீடு’’ அறிவிக்கப்பட்டு, மருத்துவமனையின் அவசரநிலை குழுக்களான தல மீட்பு குழு, உள் ட்ரைஜ் குழு, கார்டன் குழு, சால்வேஜ் குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் மேலாண்மை குழு ஆகிய ஐந்து குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தவிர, ஆம்புலன்ஸ்கள் ரயில் நிலையத்திற்கு வந்தன. பின்னர், ரயில் பெட்டிகளில் காயமடைந்தவர்களை மீட்டு முதல் உதவியை வழங்கினர். ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மருத்துவமனையில் உள் மருத்துவ குழு பரிசோதித்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து காயமடைந்தவர்களை வகைப்படுத்தி, மேல் சிகிச்சைக்காக மாற்றியது.

காயமடைந்த 6 நபர்களை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும், இரண்டு கர்ப்பிணி பெண்கள், மகப்பேறு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். காயமடைந்த இரண்டு நபர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்த பத்து நபர்கள் அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்த ஐந்து நபர்கள் அவசர சிகிச்சையிலிருந்து புறநோயாளிகள் அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த முழு ஒத்திகை பயிற்சியும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி ரயி நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்தில் நடந்தது. விபத்தில் காயமடைந்தவர்கள் தத்ரூபமாக நடித்தது, ரயில் பயணிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அது ஒத்திகை நிகழ்ச்சி என்பதை தெரிந்து கொண்டு பயணிகள் சமாதானம் அடைந்தனர்.

இதில், மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், மருத்துவ இயக்குநர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், அவசர சிகிச்சை ஆலோசகர்கள் மஞ்சுநாத், பார்த்திபன், கோவை ரயில் நிலைய கோட்ட பாதுகாப்பு அதிகாரி ஆகாஷ் வர்மா, கோவை நிலைய இயக்குனர் சச்சின் குமார், கோச்சிங் டிபாட் அதிகாரி அனுஜ் ரத்தோர், உதவி பாதுகாப்பு கமிஷனர் ரதிஷ் குமார், கோவை நிலைய மேலாளர் ஸ்ரீதரன், கோவை நிலைய உதவி மேலாளர் சதிஷ், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் கோவை ரயில் நிலைய ஊழியர்கள் பங்குபெற்றனர். மேலும், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், கோவை ரயில் நிலைய ஊழியர்களுக்கு சிபிஆர் பயிற்சியளித்தனர்.

The post ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து கால ஒத்திகை பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article