ராமநாதபுரம், ஜன.12: சென்னை-மண்டபம் விரைவு ரயிலில் தவறவிட்ட 20 பவுன் நகைகளை ராமநாதபுரம் ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் பனையூரைச் சேர்ந்த பாரதி கண்ணன், தனது மனைவியுடன் சென்னையில் இருந்து பரமக்குடிக்கு ரயிலில் வந்துள்ளார். நேற்று பரமக்குடி ரயில் நிலையத்தில் அதிகாலை வந்து இறங்கியபோது தனது கருப்பு கலர் டிராலி பெட்டியை வண்டியில் மறந்து விட்டு இறங்கிவிட்டார். உடனடியாக ரயில்வே போலீஸ் எண்.139-க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமைக் காவலர் கோபாலகிருஷ்ணன், முதல்நிலை காவலர் அருண்குமார் ஆகியோர், அவர்கள் பயணம் செய்த முன்பதிவு பெட்டியில் தேடி பாரதி கண்ணனின் டிராலி பெட்டியை எடுத்தனர். அதில் 20 பவுன் தங்க நகைகள், ரூ.2 ஆயிரத்து 500 பணம் ஆகியவை இருந்தது. பின்பு பெட்டியை தவறவிட்ட பாரதிகண்ணன் ராமநாதபுரம் ரயில் நிலையம் வந்து, அவரது டிராலி பெட்டியில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை சரிபார்த்து ரயில்வே போலீசாரிடம் பெற்றுக் கொண்டார். மேலும் தனது பெட்டியை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
The post ரயிலில் தவற விட்ட 20 பவுன் நகைகள் மீட்டு ஒப்படைப்பு appeared first on Dinakaran.